வியாழன் அன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் நடந்த முத்தரப்பு சந்திப்பின் போது, உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மின் உற்பத்தி நிலையத்தில் நடந்து வரும் சண்டைகளுக்கு மத்தியில், தனது நாடு “மற்றொரு செர்னோபில்” குறித்து கவலைப்படுவதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பித்த பின்னர், முதன்முறையான உக்ரைனுக்கு சென்று, அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சு நடத்தியுள்ளார் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன். ஐ.நா செயலாளரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
ரஷ்யா, உக்ரைனிற்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியின் அங்கமாக எர்டோகனின் விஜயம் அமைந்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தை சுற்றி போர் வெடித்துள்ளதால், உலகத் தலைவர்களிடமிருந்து அவசர எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஆலைக்கு ஏற்படும் எந்த சேதமும் “தற்கொலைக்கு” ஒத்ததாக இருக்கும் என்று எச்சரித்தார்.
இதனை சுட்டிக்காட்டி, “நாங்கள் கவலைப்படுகிறோம். எங்களுக்கு மற்றொரு செர்னோபில் தேவையில்லை” என எர்டோகன் கிழக்கு நகரமான லிவிவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அப்போது அவர் உக்ரைனின் ஒரு உறுதியான கூட்டாளி என்று உறுதியளித்தார்.
“ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடரும் அதே வேளையில், நாங்கள் எங்கள் உக்ரைன் நண்பர்களின் பக்கம் இருக்கிறோம்,” என்று எர்டோகன் கூறினார்.
ரஷ்யாவுடன் முக்கிய புவிசார் அரசியல் போட்டிகளைக் கொண்ட எர்டோகன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய தலைவரை கருங்கடல் ரிசார்ட் சோச்சியில் சந்தித்தார்.
ரஷ்யாவின் படையெடுப்பு அத்தியாவசிய உலகளாவிய உணவு விநியோகங்களைத் தடுத்த பின்னர் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. துருக்கி ஜனாதிபதி, ஐ.நா செயலாளர் குட்டெரெஸ் ஒப்பந்தத்தின் முக்கிய பின்னணி செயற்பாட்டாளர்களாக இருந்தனர்.
ஒப்பந்தத்தின் கீழ் 25 வது சரக்குக் கப்பல் 33,000 தொன் தானியங்களை ஏற்றிக்கொண்டு எகிப்துக்குப் புறப்பட்டதாக உக்ரைனின் துறைமுக அதிகாரசபை நேற்று அறிவித்தது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களாகும். அவற்றின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டதும் உலகளவில் தானியங்களின் விலைகள் உயர்ந்தன. உலகளாவிய உணவுப் பற்றாக்குறையின் அச்சம் எழுந்தது. குறிப்பாக ஏழை நாடுகளில் ஏற்கனவே பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தெற்கு துறைமுகங்களில் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இரு தரப்பினரும் நம்புவதாக செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது குட்டரெஸ் கூறினார்.
கருங்கடல் துறைமுகங்களில் இருந்து சரக்குக் கப்பல்கள் வெளியேற பாதுகாப்பான நடைபாதை அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பாராட்டி, “வரவிருக்கும் குளிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் எங்களது செயல்பாடுகளை அதிகரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று ஐ.நா. தலைவர் கூறினார்.
இதேவேளை, நேற்றைய சந்திபபில், ரஷ்யா தனது துருப்புக்களை உக்ரேனில் இருந்து திரும்பப் பெறாத வரையில் சமாதான பேச்சு வாய்ப்பில்லையென உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா “ஒருவித அமைதிக்கு தயாராக உள்ளது” என்று ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனிடமிருந்து கேட்டதற்கு “மிகவும் ஆச்சரியமாக” இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்: “முதலில் அவர்கள் எங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும், பின்னர் நாங்கள் பார்ப்போம்.” என்றார்.