சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தின் துணை குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று புதன் கிழமை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடிகைக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் இரண்டாவது துணை வழக்குப் புகாரை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் ஜாக்குலின் மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஆகியோர் சாட்சிகளாக தங்கள் வாக்குமூலத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, ஜாக்குலினுக்கு சொந்தமான ரூ.7.2 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புத்தொகையை சுகேஷின் மோசடி பணத்தின் மூலமாக பரிசுகள் என அமலாக்க இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்த பரிசுகள் மற்றும் சொத்துக்கள் நடிகை பெற்ற குற்றத்தின் வருமானம் என்று விசாரணை நிறுவனம் கூறியது. பெப்ரவரியில், சந்திரசேகருக்கு நடிகைகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் உதவியாளர் பிங்கி இரானிக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் தனது முதல் துணை வழக்குப் புகாரை தாக்கல் செய்தது.
ஜாக்குலினுக்கு பிங்கி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதாகவும், பின்னர் சந்திரசேகர் பணம் செலுத்திய பிறகு அவற்றை தனது வீட்டில் விட்டுச் செல்வதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரவீன் சிங் முன்னிலையில் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
சந்திரசேகர் பல்வேறு மொடல்கள் மற்றும் பாலிவுட் நடிகைகளுக்காக சுமார் 20 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவரிடமிருந்து பரிசுகளை வாங்க மறுத்துவிட்டனர். குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியின்படி, ஜாக்குலின் சுகேஷிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாகவும், மேலும் அவர் “எஸ்புவேலா” என்ற குதிரையையும், அரேபிய பூனையையும் வாங்கியதாகவும் கூறுகிறார்.
மேலும் அவர் தனக்காக ஒரு சொகுசு காரை வாங்கியதாகவும், ஆனால் அவர் அதை திருப்பி கொடுத்ததாகவும் நடிகை மேலும் கூறினார்.
முன்னதாக, சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்த பொய்யை நம்பி அவரை காதலித்ததாக, அமலாக்கத்துறை விசாரணையில் ஜக்குலின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.