யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (14) இரவு இரண்டு வாள்வெட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் நகரிலுள்ள பலசரக்கு கடை ஒன்றிற்குள் நேற்று மாலை 6.10 மணியளவில் நுழைந்த ரௌடிகள், அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், கடையின் உரிமையாளரான பெண்ணுக்கும், அங்கு பணிபுரிந்த தெல்லிப்பளையை சேர்ந்த 21 வயது இளைஞனிற்கும் வாளால் வெட்டி காயமேற்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிரான்ஸில் வசிக்கும் ஆவா குழு ரௌடி ஒருவரின் சகோதரிக்கு சொந்தமான வர்த்தக நிலையம் இது.
இரவு 7 மணியளவில், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியிலுள்ள மீரா கடை பகுதியில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த 27 வயதான இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மூடியபடி, கைகளில் வாள்களை ஏந்தியபடி வந்த ரௌடிகள் அவரை சரமாரியாக வெட்டினர்.
பாதிக்கப்பட்ட நபரின் தலை, முதுகு, வலது கையில் காயமேற்பட்டது. வலது கை சின்ன விரல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் பொலித்தீன் பையில் விரலை எடுத்துக் கொண்டு வைத்திய சாலை கொண்டு வரப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மூவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களின் பின்னணி உடனடியாக தெரிய வரவில்லை.
ஒரு ரௌடிக்குழுவே இரண்டு தாக்குதல்களையும் நடத்தியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.