தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் டனிஷ் அலியை தலா 25,000 ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (15) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான பொதுச் சொத்து சட்டத்தின் பிரகாரம், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க போதிய உண்மைகள் இல்லை என நீதவான் சந்தேக நபரை பிணையில் விடுவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குருதுவத்தை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் சந்தேகநபரை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 26ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் காத்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 27ஆம் திகதி கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை செய்திருந்தனர்.
குருநாகல் வெபட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான டனிஷ் அலி என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் டனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.