நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் அதிகளவான பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி கூறினார்.
15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில், கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் பயன்பாடுகள் மூலம் பலர் புதிய உறவுகளை உருவாக்குவதாகவும் தெரிவித்தார். அதோடு, சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக, பாலியல் நோய்கள், எச்.ஐ.வி தொற்று மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.




