ஈரான் தனது மேம்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த ரஷ்ய படையினருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றிக்கான தெளிவான அறிகுறி இல்லாமல் பல மாதங்களாக யுத்தம் நீண்டு செல்லும் நிலையில், யுத்தத்தை விரைவாக முடிக்க ரஷ்யா முனைவதாக தெரிகிறது. யுத்த தளபாட பற்றாக்குறையை நிவர்த்திக்க, ஈரானிடமிருந்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை பெற உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவும் ஈரானும் ஆளில்லா விமான பரிமாற்றம் தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டியே தற்போதைய தகவலும் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த செய்தியை ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் மறுத்துள்ளன.
பெப்ரவரி 24 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிராக தனது “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” அறிவித்ததிலிருந்து கடந்த ஐந்து மாதங்களாக உக்ரைன் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பைரக்தார் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
இந்த நிலையில், ஈரானின் ஷாஹெத்-129 மற்றும் ஷாஹெட்-191 ஆளில்லா விமானங்களை ரஷ்யா வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளில்லா விமானங்களை மதிப்பிடுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் ஈரானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த மாதம் ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் குறித்து எச்சரித்திருந்தார்.
ரஷ்ய அதிகாரிகள் ஈரானுக்கு இரண்டு முறை விஜயம் செய்ததாகவும் அவர்கள் கஷான் விமானநிலையத்தில் காணப்பட்டதாகவும் ஜேக் சல்லிவன் தெரிவித்தார். ரஷ்ய அதிகாரிகள் “ஈரான் தாக்குதல் திறன் கொண்ட ஆளில்லா விமானங்ககளின் காட்சிப் பெட்டியைப் பெற்றுள்ளனர்” என்று சல்லிவன் மேலும் கூறினார். ரஷ்ய அதிகாரிகளின் படங்களையும் அமெரிக்கா வெளியிட்டது.