மயிலந்தனை படுகொலை நினைவு!

Date:

மட்டக்களப்பு புணானை மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மயிலந்தனை ஸ்ரீசிவ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நேற்று (9) நடைபெற்றது.

ஆலயத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி விசேட பூசை இடம்பெற்று நினைவு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்பட்டது.

பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மதகுருமார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நினைவு கூறப்பட்டதுடன் தங்களுக்கான நீதி மறுக்கப்பட்டதாக கவலை தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்திற்கு நீதி வேண்டி ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் முகமாக, தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் தயாரிக்கப்பட்டு ஊடகங்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டது.

அதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.

மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புனாணை மயிலந்தனை கிராமத்தில் 9 ஆம் திகதி ஆவனி மாதம் 1992 ஆம் ஆண்டு எமது மயிலந்தன்னை கிராமத்தை சார்ந்த சிறுவர்கள் பெண்கள் அடங்கலாக 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டார்கள்.

34 பேர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள். அன்றைய நாளில் 35 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 4பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இதன்போது எமது கிராமத்தினைச் சேர்ந்த நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவ முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரே இப் படுகொலையை நிகழ்த்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தில் அடையாள அணி வகுப்பு இடம்பெற்று 24 இராணுவத்தினர் எமது கிராமத்தில் உயிர்தப்பிய எங்களால் அடையாளம் காட்டியிருந்தோம்.

பின்னர் இவ்வழக்கு பொலனறுவை நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருந்தபோதும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபர் இவ்வழக்கை கொழும்பு நீதி மன்றத்திற்கு மாற்றினார். இதனால் எமது கிராமத்தினைச் சேர்ந்த சாட்சிகள் கொழும்பு சென்று சாட்சி சொல்வதற்கு பெரும் சிரமப்பட்டதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில் 1993 புரட்டாதி மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பில் இருந்து 30 ற்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரணையில் கலந்து கொண்டோம். தீவிர விசாரணையின் பின்னர் தீர்ப்பு கூறும் முடிவு ஜூரி குழுவிற்கு கொடுக்கப்ப்ட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என ஜூரி குழு ஏகமனதாக தீர்ப்பளித்தது.

மீண்டும் இதனை பரிசீலிக்குமாறு நீதிபதி கேட்டுக்கொண்டபோதும் ஜூரி சபையினர் அவர்களை குற்றமற்றவர்கள் எனக் கூறினர்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் சார்பாக மேன் முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 18 இராணுவத்தினரும் நவம்பர் 27 ஆம் திகதி 2002 விடுதலை செய்யப்பட்டனர்.

இத் தீர்ப்பினை அடுத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புக்களும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்களும் எமது கிராம மக்களும் இது குறித்து அதிருப்தி அடைந்தோம்.

எனவே மயிலந்தனை படுகொலை நடந்து இன்று 30 ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம் என அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ருத்ரன்-

spot_imgspot_img

More like this
Related

தன்சலுக்காக காத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று...

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்