உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை, பொருட்கள், மரக்கறிகள் மற்றும் பிற பொருட்களின் விலை குறைப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று விலையில் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், கடந்த வாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது விலை குறைப்பை அறிவிக்கத் தவறியதால், நாளை அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
எரிவாயுவின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக குறைக்கப்படும் என நம்புவதாக அசேல சம்பத் தெரிவித்தார்.
புறக்கோட்டை சந்தையில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக குறைந்துள்ள போதிலும் மற்ற நகரங்களில் அல்லது கிராமப்புறங்களில் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
எனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் உணவுப் பொதி மற்றும் சாதாரண தேநீர் ஆகியவற்றின் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
மதிய உணவு, கொத்து மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விலை நிலையாக இருக்க வேண்டும் என்றார்.
பண்டங்களின் விலை அதிகரிப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை தொழிற்துறைக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குமாறும் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.




