குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி எனக் கூறி 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவரைப் பிரிந்து, மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 26ஆம் திகதி இவர்கள் இருவரும் நுவரெலியா பிரதேசத்தில் பேசிக் கொண்டிருந்த போது, தன்னை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி எனக் கூறிக் கொண்டு வந்த ஒருவர், அந்த காதல் ஜோடியை விசாரணைக்கு உட்படுத்தினார்.
இருவருக்கும் இடையில் வயது வித்தியாசம் ஒத்துப் போகவில்லை எனக் கூறியஅந்த நபர், இருவரையும் தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், 21 வயதான இளைஞனை மிரட்டி, விரட்டியடித்துள்ளார்.
தான் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக மிரட்டிய ஆசாமி, 38 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண் நுவரெலியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.