அரசை சீர்குலைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் ‘கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள்’ என்ற கோசங்களுடன் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதோடு போராட்டம் முடிவுக்கு வரும் என அவர்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். மற்றொருவரை வீட்டிற்கு அனுப்புவதற்காக மீண்டும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி அணிதிரளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மக்களை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.
அந்த முயற்சி நிறைவேறியதும், பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று கூறிய அவர், இந்த சுழற்சியை நகைச்சுவையாக குறிப்பிட்டார். கோட்டா கோ ஹோம், ரணில் கோ ஹோம், தினேஷ் கோ ஹோம் என கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக, தமக்கு யார் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறினால் காரியங்கள் இலகுவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த நாடு மீண்டும் சுவாசிக்க வேண்டுமா, இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தலை தூக்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். தானும் இந்த அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கூறிய அவர், எனினும் நாட்டின் குறைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையை லிபியா போன்று சித்தரிக்க போராட்டக்காரர்கள் வெளிநாட்டு ஊடகங்களுடன் தினமும் பேசுவதாக தெரிவித்த எம்.பி., இதுபோன்ற முயற்சிகள் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியா என்றும் கேள்வி எழுப்பினார். அரசு கட்டிடங்களை கைப்பற்றுவது அமைதியான போராட்டத்தின் ஒரு பகுதியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதை சொன்னால் தாக்குவார்களோ, வீட்டுக்கு தீ வைப்பார்களோ என நினைக்குமளவிற்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.
ரஷ்யாவிலிருந்து வந்த இருவருடன் காலிமுகத்திடலிற்கு அருகில் வாகனத்தில் சென்றோம். உக்ரைனிலும் இதுதான் நடந்ததென சொன்னார்கள். ரஷ்யாவிற்கு சார்பான ஜனாதிபதியை விரட்ட மக்கள் பூங்காவில் கூடினார்கள். அப்படி வந்தவர்களிற்கு நாளொன்றிற்கு 3 டொலர் வீதம் அமெரிக்க தூதரகத்தால் வழங்கப்பட்டது என்றார்.
அவர் காலி முகத்திடலை பார்த்து கூறினார், உங்கள் நாட்டை உங்கள் ஜனாதிபதி நிர்வகிக்கவில்லை.ஜனாதிபதிக்கு மேலாக அமெரிக்க தூதர் உள்ளார் என்றார்.
எனக்கு புரியவில்லையென்றேன். உண்மை என்னவென்றால், ஜனாதிபதி கோட்டாபய வாரத்திற்கு 3 தடவையாவது ஜூலி அம்மையாரை சந்திப்பார். அந்த அம்மையார் கோட்டாவின் மனதிற்குள் தடைகளை ஏற்படுத்துவார். அப்படி செய்யும்போது எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்படாது. அப்போது பிரச்சனை உக்கிரமடையும். இவ்வாறு செய்ததற்காக இறுதியில் எந்த நாட்டிலிருந்தும் உதவி கிடைக்கவில்லையென்றார்.