27.6 C
Jaffna
August 19, 2022
தமிழ் சங்கதி

ரணில் ஜனாதிபதியானதும் நடந்த சுவாரஸ்யம்: வாழ்த்தச் சென்ற சுமந்திரன், சாணக்கியன்; ரணிலின் ரியாக்‌ஷன்!

புதிய ஜனாதிபதி தெரிவை முன்னிட்டு, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிற்குள் நடந்த பல திரைமறைவு சம்பவங்களை கடந்த சில நாட்களாக தமிழ்பக்கம் வெளிச்சமிட்டு காட்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி தெரிவு நடந்து முடிந்த பின்னர் நடந்த சுவாரஸ்மான சம்பவமொன்றை குறிப்பிடுகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க முடிவெடுத்தமைக்கு முக்கிய காரணம், எம்.ஏ.சுமந்திரன்.

இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகிய மூவருமே டலசை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்தனர். ஏனையவர்கள் நடுநிலை வகிக்கலாம் என்றனர். (இந்த நடுநிலை நிலைப்பாட்டை முன்வைத்தவர்கள் நேர்மையாக முன்வைத்தார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இந்த தரப்பில் பலர் ரணிலை ஆதரித்து வாக்களித்துள்ளனர். நடுநிலை தீர்மானத்தை கூட்டமைப்பு அறிவித்திருந்தாலும், நடுநிலை போர்வையில் ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது)

ரணில் விக்கிரமசிங்க பிரதமரான பின்னர், அவருடன் சுமந்திரனும், சாணக்கியனும் மல்லுக்கட்டுவது ஊரறிந்த விவகாரம். இந்த பின்னணியிலேயே, ஜனாதிபதி தெரிவில் ரணிலுக்கு எதிரான நகர்வை சுமந்திரன் முன்னின்று செயற்படுத்தினார்.

எனினும், ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். டலசிற்கு வாக்களிப்பதாக சொன்ன கட்சிகளின் உறுப்பினர்கள் ‘எதை பெற்றுக்கொள்ள’வென தெரியவில்லை, கட்சி தீர்மானங்களை மீறி ரணிலுக்கு வாக்களித்தனர்.

ரணில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்கார்ந்து உணவருந்த தயாராகிக் கொண்டிருந்தனர். சற்று பின்னால், சுமந்திரனும், சாணக்கியனும் உட்கார்ந்திருந்தனர்.

அப்பொழுது, முன்பக்க வாசல் வழியாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தார்.

புதிய ஜனாதிபதியை கண்டபோதும், முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், சாதாரணமாக உட்கார்ந்து பேசிக் கொண்டேயிருந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த சுமந்திரனும், சாணக்கியனும் வேகமாக எழுந்து முன்னால் வந்து, ரணிலை நோக்கிச் சென்றனர்.

எதிர்தரப்பு என்றாலும், வாழ்த்து சொல்வது நாகரிகமான சபைப்பண்பு. இருவரும் ரணிலுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ரணில் எந்த சலனமுமில்லாமல்- அதேசமயம் ஒரு அலட்சிய பாவத்துடன், இருவருக்கும் கைலாகு கொடுத்து விட்டு நகர்ந்து சென்று விட்டார். சம்பிரதாயமாகவும் பேசவில்லை.

உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டே சென்ற ரணில், உணவருந்தி விட்டு, திரும்பி வந்தார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி சென்ற ரணில், அங்கிருந்த கூட்டமைப்பு எம்.பிக்களுடன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

வடக்கு அபிவிருத்திக்கு கூடுதல் அக்கறை காண்பிப்பதாகவும், புலம் பெயர்ந்தவர்களின் பணமும் கிடைக்கும் விதமான நிதியம் ஒன்றை உருவாக்கித் தருவதாகவும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை படிப்படியாக நிறைவேற்றித் தருவதாகவும், சேர்ந்து வேலை செய்வோம் எனவும் ரணில் தெரிவித்தார்.

அப்போது, அந்த கூட்டமைப்பு குழுவிலிருந்த மட்டக்களப்பு மாவட்ட ரெலோ எம்.பி ஜனா, ‘வடக்கை போலவே கிழக்கிற்கும் இதே அமைப்புக்களை உருவாக்கித் தர வேண்டும்’ என்றார்.

‘வடக்கை மட்டும் நான் சொல்லவில்லை. வடக்கு கிழக்கு இரண்டிற்கும்தான் அந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்’ என ரணில் குறிப்பிட்டார்.

சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்த பின்னர், எழுந்து சென்றார்.

அவர் உரையாடிக் கொண்டிருந்த போதே, எழுந்து போன போதோ- அந்த இடத்திற்கு சற்று தள்ளி உட்கார்ந்திருந்த சுமந்திரன், சாணக்கியனை கண்டுகொள்ளவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Related posts

விக்னேஸ்வரனையும், கஜேந்திரகுமாரையும் முகம் பார்க்க வைக்க வரும் சிங்கள பெண் பிரபலம்!

Pagetamil

மோடியுடனான சந்திப்பை தவிர்த்தமைக்கு சம்பந்தன் சொன்ன ‘குபீர்’ காரணம்: முகத்திலறைந்தாற் போல பதிலளித்த இந்திய தூதர்!

Pagetamil

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!