முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலுள்ள சைவ, தமிழ் பௌத்த தொல்லியல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டமானங்களை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா, புதிய கட்டுமானங்களை அகற்றும் போது தொல்லியல் சின்னங்களும் அகற்றப்பட வாய்ப்பு இருப்பதால், புதிய கட்டடங்கள் அமைக்கப்படாமல் தற்போதுள்ளபடியே கட்டுமானங்களை பராமரிக்க வேண்டுமென்ற திருத்திய கட்டளையை வழங்கினார்.
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் சைவ ஆலயம், தமிழ் பௌத்த தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான அங்கு, பௌத்த சிங்கள கட்டுமானங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் தாதுகோபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பிரதேச மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான பணிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆலய நிர்வாகம்சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 14ஆம் திகதி இது தொடர்பான தீர்ப்பை வழங்கிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவண ராஜா, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றும்படியும், இது தொடர்பான அறிக்கையை ஜூலை 30ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, குருந்தூர்மலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த நீதவான், தொல்லியல் சின்னங்களின் மேல் புதிய சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவற்றை அகற்றும் போது, தொல்லியல் சின்னங்களும் பாதிக்கப்படலாம் என குறிப்பிட்டு, திருத்திய கட்டளையொன்றை பிறப்பித்தார்.
சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றாமல் , ஜூன் மாதம் 12ஆம் திகதி இருந்ததை போல அந்த பகுதியை பராமரிக்கும்படி பொலிசாருக்கு திருத்திய கட்டளையின் மூலம் உத்தரவிட்டார்.
அந்த பகுதியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை தொடர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




