தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாமென தெரிகிறது.
இன்று (20) காலையில் தமிழ் பக்கத்துடன் பேசிய க.வி.விக்னேஸ்வரன், ‘ரணிலை ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது. சஜித் போட்டியிலிருந்து விலகிய பின்னர் நிலைமைகள் மாற்றமடைந்துள்ளது. எமது நிலைப்பாடு தொடர்பில் இன்றும் சற்று நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொலைபேசி வழியாக கலந்துரையாடப் போகிறோம். அதை தொடர்ந்து முடிவை பகிரங்கமாக அறிவிப்போம்’ என்றார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து பேசியதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
‘ஜனாதிபதியாக தெரிவானதும் தமிழ் மக்களிற்கு இந்திய பாணியிலான அதிகார பகிர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளேன். இந்திய அசியலமைப்பு ஒற்றையாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அதில் சமஷ்டியின் அங்க இலட்சணங்கள் பல உள்ளன. அதுவே எமது நாட்டுக்கும் பொருத்தமானது என கருதுகிறேன்.
இந்திய பாணியிலான அதிகார பரவாக்கல் தொடர்பாக பரிசீலிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டேன்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் எனக்கு புதியதல்ல. அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன்’ என ரணில் வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்கவையே, விக்னேஸ்வரன் ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ் பக்கம் அறிகிறது.