ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று நீண்டநேரம் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் முடிவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றகுழுவை சந்தித்து, வழங்கிய உத்தரவாதத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க வேண்டும் என்றனர். சாணக்கியனும் அதை ஆமோதித்தார்.
எனினும், ஏனைய 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை எதிர்த்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் ஆதரிக்காமலிருக்க வேண்டுமென்றனர். இது தொடர்பான நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.
இதையடுத்து, நிலைமையை சமாளிக்க முயன்ற சுமந்திரன், வேட்பாளர்களை அழைத்து நேரில் உத்தரவாதம் கேட்போம் என்றார். அத்துடன், டலஸ் தரப்பிற்கு தகவலும் வழங்கினார்.
இதையடுத்து, டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவை சந்திக்க வந்தனர்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தல், இராணுவ மற்றும் தொல்லியல் காரணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான காணி அபகரிப்பும் தடுத்து நிறுத்தல், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றுதல் ஆகிய உடனடி கோரிக்கைகளுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வுக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் டலஸ் தரப்பிடம் முன்வைக்கப்பட்டது.
இதனை டலஸ் தரப்பு ஏற்றுக்கொண்டது.
எனினும், எழுத்துமூலமாக உத்தரவாதம் வழங்கப்பட்டால், அந்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் என டலஸ் தரப்பு அச்சம் வெளியிட்டது. எனினும், எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கும் செயற்பாடு நடந்து வருகிறது.