நடாளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவின் போது, யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இன்னும் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லை. இன்று மாலை நீண்ட கலந்துரையாடல் நடந்த போதும், இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
இதனால், நாளை காலை, மாலையென இரண்டு நேரங்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறும்.
இன்று மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்குமென திட்டமிடப்பட்ட போதும், மாலை 5.30 அளவிலேயே கூட்டம் ஆரம்பித்தது.
கூட்டம் ஆரம்பித்த சுமார் 10 நிமிடங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கு திடீரென வந்தார்.
இரா.சம்பந்தனின் சுகநலனை விசாரிக்க மட்டுமே வந்ததாக தெரிவித்த சஜித், சம்பந்தனின் உடல் நலன் குறித்து விசாரித்தார். பின்னர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பொதுவான விடயங்கள் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு சென்று விட்டார். வாக்கெடுப்பில் தன்னை ஆதரிக்கும்படி அவர் கோரியிருக்கவில்லை.
எனினும், அண்மை நாட்களாக ரணில் எதிர்ப்பில் தீவிரம் காட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியொருவரின் திட்டத்தின் அடிப்படையிலேயே அவர் அங்கு பிரசன்னமாகியிருக்கலாமென கருதப்படுகிறது.
சஜித் பிரேமதாச சென்ற பின் நடந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது.
சஜித் பிரேமதாச போட்டியிலிருந்து விலகி, டலஸ் அழகப்பெருமவிற்கு வாய்ப்பளிக்கலாமென்று கூறப்பட்டது.
தனக்கு பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே 60 பேர் ஆதரவளிப்பதாக டலஸ் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பு எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.
டலஸ் ஜனாதிபதியாகவும், சஜித் பிரதமராகவும் வரும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கலாமென்றும் குறிப்பிடப்பட்டது.
சஜித் அல்லது டலஸிற்கு வாக்களிக்கலாமென சில எம்.பிக்கள் குறிப்பிட்டனர். ரணிலுக்கு வாக்களிப்பது போராட்டக்காரர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் தெரிவித்தனர்.
எனினும், தென்னிலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல், தமிழ் மக்களின் விவகாரங்களை முன்னிறுத்தி ரணிலை ஆதரிக்கலாமென்றும் சிலர் குறிப்பிட்டனர்.
நீண்ட காலந்துரையாடலின் பின்னர், வாக்கெடுப்பை புறக்கணிக்கலாமென்ற தரப்பில் அதிக எம்.பிக்கள் இருந்தனர். சுமார் 6 வரையான எம்.பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்கலாமென்ற நிலைப்பாட்டிற்கு வந்ததை தமிழ் பக்கம் அறிந்தது.
எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. நாளை மீண்டும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறும்.