தொழிலில் முதலிடும் பணத்தை முனியப்பர் ஆலயத்தில் வைத்து பூசை செய்தால், தொழில் சிறக்கும் என சொன்னதை நம்பி, 10 இலட்சம் ரூபாவை இழந்ததாக இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
பணத்தை பூசை செய்துவிட்டு அர்ச்சகர் திருப்பிக் கொடுத்த போது, இருவர் பறித்துக் கொண்டு ஓடியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, கல்முனையை சேர்ந்த இருவர் நெல் வெட்டும் இயந்திர பாகமொன்றை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஒருவர், இந்த பாகம் யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவரிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ளவர் அந்த பாகத்தின் தற்போதைய பெறுமதி 10 இலட்சம் ரூபா என கூறியுள்ளார்.
10 இலட்சம் ரூபாவுடன் இருவரும் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். அவர்களை கோட்டை, முனியப்பர் கோயிலுக்கு அண்மையாக வருமாறு, இயந்திரம் விற்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் அந்த இடத்திற்கு வந்த போது, இயந்திரம் விற்பதாக கூறிய இரண்டு நபர்கள் அங்கு வந்தனர். பணத்தை பெறுவதற்கு முன்னதாக, முனியப்பர் ஆலயத்தில் வைத்து பூசை செய்யுமாறு கூறியுள்ளனர்.
தொழிலில் முதலிடும் முன்னர் பணத்தை வைத்து பூசை செய்தால் தொழில் சிறக்கும் என கூறியுள்ளனர்.
அதை நம்பிய இருவரும், முனியப்பர் ஆலயத்தில் வைத்து பூசை செய்துள்ளனர்.
பூசை செய்து விட்டு பணத்தை அவர்களிடம் பூசகர் வழங்கிய போது, பணத்தை பறித்துக் கொண்டு இருவரும் தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.