பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு நேற்று இரவு 8 மணியளவில் கும்பல் ஒன்று தீ வைத்து.
நேற்று (9) அரசுக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியதை தொடர்ந்து, நேற்று இரவு பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது.
கொழும்பில் நேற்று 100,000 இற்கும் அதிக போராட்டக்காரர்கள் குவிந்ததாக பொலிசார் மதிப்பிட்டுள்ளனர்.
விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகக் கோரி நேற்று மாலை முதல் கொழும்பு 3, 5வது லேனில் அமைந்துள்ள இல்லத்திற்கு வெளியே சுமார் 200 பேர் கொண்ட கூட்டம் ஒன்று கூடியிருந்தது. போராட்டக்காரர்கள் குடியிருப்பை நோக்கி செல்ல முயன்றபோது, பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை வீசினர்.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குடியிருப்புக்கு வெளியே நின்றிருந்த சிரச தொலைக்காட்சியின் பல ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வலையமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்தம் ஆறு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் பற்றிய செய்தி பரவியதும், ஒரு பெரிய குழு அந்த இடத்தில் குவியத் தொடங்கியது. ஒரு பொலிஸ் பேருந்து தகர்க்கப்பட்டது. மக்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிரதமரின் இல்லம் மீது கற்களை வீசினர்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு விக்கிரமசிங்க வருந்துவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த சமயத்தில், சம்பவ இடத்துக்கு புதிதாக வந்த குழுவொன்று, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலிற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தூண்டி விட்டுக் கொண்டிருந்ததாக அங்கிருந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் ஒரு குழு பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, இரவு 9 மணியளவில் பிரதமரின் வீட்டுக்குள் நுழைந்து, தீ வைத்து எரித்தது.
தீயணைப்பு வாகனம் வந்ததும், பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் தீயை அணைக்க விடாமல் தீயணைப்பு வீரர்களையும் அந்த குழுவினர் தடுத்துள்ளனர். எனினும், பக்கத்து வீடுகளில் தீயணைப்பு பணி மேற்கொள்ள அனுமதித்துள்ளனர்.
இதன்போது, தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர் ஒருவர் கட்டுப்பாட்டில் எடுத்தார்.
இரண்டு வாகனங்கள் அனுப்பப்பட்ட போதும், பிரதமரின் இல்லத்தில் தீயணைப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.




