25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

அன்னதான மடத்தில் முடிந்த அவுஸ்திரேலிய கனவு: படகுப் பயணஆசைகாட்டுபவர்களிடம் பணத்தை இழக்காதீர்கள்!

தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்னர்.

நேற்று முன்தினம் (6) அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதானவர்களை இன்று (8) வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

வவுனியா, முல்லைத்தீவை சேர்ந்த இருவரும், திருகோணமலை, குச்சவெளியை சேர்ந்த ஒருவரும், அவரது 19 வயதான மருமகனுமே கைதாகினர்.

அவர்கள் இலங்கை முழுவதும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் நிறுவனமொன்றில் பணிபுரிபவர்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியையடுத்து, வெளிநாடு செல்லலாமென தீர்மானித்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, ஏமாற்று கும்பல் ஒன்றிடம் சிக்கியுள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்த படகேற்றி அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். முதற்கட்டமாக ஒவ்வொருவரும் தலா 2 இலட்சம் ரூபா பணம் செலுத்த வேண்டுமென்றும், அவுஸ்திரேலியா சென்ற பின்னர் மிகுதி பணத்தை செலுத்தலாமென்றும் தெரிவித்தனர்.

இதை நம்பி, நால்வரும் தலா 2 இலட்சம் ரூபா வீதம் செலுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்வதற்காக 5ஆம் திகதி அவர்கள் பருத்தித்துறைக்கு சென்றனர். பின்னர், அவர்களை தொண்டைமானாறு பாலத்திற்கு அருகில் செல்லுமாறும், தாம் வந்து ஏற்றுவதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி அவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தொண்டைமானாறு பாலத்திற்கு சென்றனர்.

எனினும், யாரும் வரவில்லை. பின்னிரவாகி விட்ட போதும், யாரும் வராத நிலையில், தமது முகவரை தொடர்பு கொண்ட போது, அருகிலுள்ள செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சென்று இருக்குமாறும், அங்கு வந்து ஏற்றிச் செல்வதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அன்னதான மடமொன்றிற்கு பக்கத்தில் சென்று உட்கார்ந்தனர்.

அந்த பகுதியில் ரோந்து சென்ற இராணுவத்தினர், அதிகாலை 1 மணியளவில் கோயிலடியில் நடமாடியவர்களில் சந்தேகமடைந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முயன்று, ஏமாந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறி, அவர்களிடம் பணம் பெற்ற மோசடிக் கும்பல் தலைமறைவாகி விட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில், தமது குடும்பங்களை வாழ வைக்கலாமென அவுஸ்திரேலியா செல்ல முடிவெடுத்த அப்பாவிகள் நால்வர் இப்பொழுது விளக்கமறியலில் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் வாங்கி, படகில் ஆட்களை ஏற்றிவிட்டு, கடற்படைக்கு இரகசியமாக தகவல் தருபவர்களே, தற்போது அவுஸ்திரேலிய முகவர்கள் என ஆசைகாட்டிக் கொண்டு வலம் வருபவர்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டு, உங்களிடமுள்ள பணத்தை மோசடியாளர்களிடம் இழக்காமல் எச்சரிக்கையுடன் இருங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

Pagetamil

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Pagetamil

18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment