நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார்.
வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து மீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களின் தகவல்படி, “ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவுல அவருடைய வீட்டுக்குப் பக்கத்துல நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்தது.
ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கோவிட் சூழலும் சேர்ந்துகொள்ள அதுக்குப் பிறகுதான் அவருடைய உடல்நிலை மோசமானது. இந்தப் புத்தாண்டு நேரத்தில் மீனா குடும்பத்தில் எல்லோருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று உடனே சரியானாலும், நுரையீரல் பிரச்னை அவருக்குத் தீரவே இல்லை. சென்னை ஆழ்வார்பேட்டையில இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆரம்பத்துல நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள். மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து நுரையீரல் தானம் கிடைப்பதில் மிக தாமதமாகும். அதற்கான காத்திருப்பு நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்த முயற்சி செய்தார்கள்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து நேற்று இறந்துட்டார்’’ என்கிற தகவல்கள் கிடைத்தன.
வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் மருத்துவமனை சென்று அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டு வந்தாராம்.