ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2:00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, பல சேவைகளின் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.60/- உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து நடத்துநர்கள் பேருந்துக் கட்டணத்தை சுமார் 35% முதல் 40% வரை உயர்த்தக் கோருகின்றனர்.
குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.32/- முதல் ரூ. 40/- வரை உயர்த்தவும் பரிந்துரைக்கின்றனர்.
ஜூலை முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய 20% அதிகரிக்க வேண்டும், எரிபொருள் விலை திருத்தத்தின் காரணமாக பஸ் கட்டணத்தை மேலும் 15 வீதத்தினாலும் அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
ஆகக்குறைந்த முச்சக்கர வண்டி கட்டணத்தை 100 ரூபாவாக அதிகரிக்க உத்தேசிக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. . இருப்பினும், இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை ரூ.90 ஆக உயர்த்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மதிய உணவுப் பொதிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.