உத்தரப் பிரதேசத்தின் சரயு நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் சுற்றியிருந்த கும்பலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஆண் ஒருவர் சரயு நதியில் நீராடுகிறார். அவர் அருகில் ஒரு பெண் இருக்கிறார். அந்தப் பெண் அவரது மனைவி எனத் தெரிகிறது.
அவர்கள் இருவரும் இணைந்து புனித நீராட முற்பட சுற்றி இருந்தவர்கள் அந்த தம்பதியை சுற்றிவளைக்கின்றனர். அப்போது அந்த நபர் தனது மனைவியை முத்தமிட சுற்றி இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்தப் பெண்ணையும் ஆணையும் தனித்தனியாக அப்புறப்படுத்தி அந்த ஆணை அடிக்கின்றனர். இது போன்ற அசிங்கத்தை அயோத்தியாவில் அனுமதிக்கமாட்டோம் எனக் கூறுகின்றனர். பதறிப்போன அப்பெண் தனது கணவரை பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இறுதியாக இருவரையும் சரயு நதியிலிருந்து அந்த கும்பல் அப்புறப்படுத்துகிறது.
இது குறித்து அயோத்தியா காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே, அந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதில் உள்ள தம்பதியினரின் அடையாளம் தெரியவில்லை. அந்த தம்பதி புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம். அந்தத் தம்பதி எங்கு வசிக்கின்றனர் என்றும் தேடி வருகிறோம் என்றார்.
अयोध्या: सरयू में स्नान के दौरान एक आदमी ने अपनी पत्नी को किस कर लिया. फिर आज के रामभक्तों ने क्या किया, देखें: pic.twitter.com/hG0Y4X3wvO
— Suneet Singh (@Suneet30singh) June 22, 2022
சரயு நதி என்பது கங்கையின் 7 கிளை நதிகளில் ஒன்று. இது இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது. அயோத்தி என்பது கடவுள் ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சரயு நதிக்கரையில் தான் அயோத்தி அமைந்துள்ளது.