29.6 C
Jaffna
July 13, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

8 வருடங்களின் முன் பாடசாலையிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: கூடவே குழந்தைகளும்!

நைஜீரியாவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராம் ஜிஹாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு முன்னாள் பாடசாலை மாணவிகளை நைஜீரிய துருப்புக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள உறைவிட பாடசாலையை தாக்கிய தீவிரவாதிகள், பல மாணவிகளை கடத்தி சென்றனர். இதில் பெருமளவானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள சிலரையும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்தவகையில் எஞ்சியுள்ள ஒரு சில மாணவிகளில், இருவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் சிறு குழந்தைகள் உள்ளன.

ஜூன் 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் துருப்புக்களால் இரண்டு வெவ்வேறு இடங்களில் சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதியில் உள்ள துருப்புக்களின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டோபர் மூசா செய்தியாளர்களிடம் கூறினார்.

2014 ஆம் ஆண்டில் டஜன் கணக்கான போகோ ஹராம் போராளிகள் சிபோக் பெண்கள் உறைவிடப் பாடசாலையைத் தாக்கி, அந்த நேரத்தில் 12-17 வயதுடைய 276 மாணவிகளை கடத்திச் சென்றனர்.

நைஜீரிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் தளபதிகளுக்கு ஈடாக 80 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ஹவ்வா ஜோசப், ஜூன் 12 அன்று பாமா பகுதியில் ஒரு போகோ ஹராம் முகாமை அகற்றிய பின்னர் சில குடிமக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

மற்றவர், மேரி டவுடா. குவோசா மாவட்டத்தில் உள்ள என்கோஷே கிராமத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டார்.

“சிபோக்கில் உள்ள எங்கள் பாடசாலையில் இருந்து நாங்கள் கடத்தப்பட்டபோது எனக்கு ஒன்பது வயது. நான் வெகு காலத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன், இந்த குழந்தை பிறந்தது” என்று ஹவ்வா ஜோசப் இராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜோசப்பின் கணவரும் மாமனாரும் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, எப்படியாவது 14 மாத மகனை காப்பாற்றிக் கொள்ளுமாறு கூறி, தீவிரவாதிகள் கைவிட்டுள்ளனர்.

“நாங்கள் கைவிடப்பட்டோம், எங்களை யாரும் கவனிக்கவில்லை. எங்களுக்கு உணவளிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் போட்டிக் குழுக்களுடனான மோதல், அரச படையின் தாக்குதலை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் மற்றும் குடும்பங்கள் கடந்த ஆண்டு சரணடைந்தனர்.

இந்த மோதலில் 2009 முதல் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடத்தப்பட்டபோது 18 வயதாக இருந்த தௌடா, சம்பிசா வனப்பகுதியில் உள்ள போகோ ஹராம் போராளிகளை வெவ்வேறு காலங்களில் திருமணம் செய்து கொண்டார்.

“நீங்கள் பிரார்த்தனை செய்ய மறுத்தால் பட்டினி போடுவார்கள். உங்களை அடிப்பார்கள்,” என போகோ ஹராமின் அட்டூழியங்களை பற்றி தௌடா கூறினார்.

அவர் தப்பிச் செல்ல முடிவு செய்து, கேமரூனின் எல்லைக்கு அருகில் உள்ள என்கோஷேக்கு அருகிலுள்ள டட்சே கிராமத்தில் மற்றொரு பெண்ணைப் (சிபோக் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்டவரே அவரும்) பார்க்கச் செல்வதாகத் தனது கணவரிடம் கூறினார்.

கிராமத்திற்கு வெளியே தனது குடும்பத்துடன் வசித்த ஒரு முதியவரின் உதவியுடன், தௌடா இரவு முழுவதும் என்கோஷேவுக்குச் சென்றார், அங்கு அவர் காலையில் துருப்புக்களிடம் சரணடைந்தார்.

“மீதமுள்ள சிபோக் பாடசாலை பெண்கள் அனைவரும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். அவர்களில் 20 க்கும் மேற்பட்டவர்களை நான் சம்பிசாவில் விட்டுவிட்டேன்,” என்று அவர் கூறினார். “நான் திரும்பி வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.”

சிபோக் பாடசாலை மாணவிகள் கடத்தலுக்குப் பிறகு ஜிஹாதிகள் வடகிழக்கில் பல பாடசாலைகளை தாக்கி மாணவிகளை கடத்தினர்.

2018 ஆம் ஆண்டில், மேற்கு ஆப்பிரிக்க யோபே மாநிலத்தில் உள்ள அரசு பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தாக்குதல் நடத்தி 110 மாணவிகளை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்ட பெண்களில் ஒரே கிறிஸ்தவரான லியா ஷரிபுவைத் தவிர அனைத்து  மாணவிகளும் ஒரு மாதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். லியா கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிமிற்கு மதம் மாற மறுத்ததற்காக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தேர்தல்: அடிப்படை உரிமை மனுவினை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Pagetamil

விமானம் ஒன்று மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியதில்,  3 பேர் பலியாகினர்.

Pagetamil

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும்-ஜப்பானின் புதிய சட்டம்

Pagetamil

உலக மக்கள் தொகை இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

Pagetamil

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழப்பு – 130க்கும் மேற்பட்டோர் காயம்

Pagetamil

Leave a Comment