படகு மூலம் வரும் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் குடியேற தமது அரசாங்கம் அனுமதிக்காது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பாது, கடல்மார்க்கமாக சென்று அவுஸ்திரேலியாவை அடைந்து விட்டால், அங்கே நிரந்தரமாக குடியிருக்கலாமென ஆட்கடத்தல்காரர்கள் தெரிவித்ததாக அண்மையில் படகில் சென்ற பெண்ணொருவர் தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய அவரது நிர்வாகத்தின் கொள்கை மிக தெளிவானது என தெரிவித்தார்.
இன்று காலை மெல்போர்னில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பிரதமர், “படகில் வரும் மக்கள் இங்கு குடியேற மாட்டார்கள். அகதிகளை தடுத்து நிறுத்தப்படுவார்கள். மக்களின் துன்பத்தில் கடத்தல்காரர்கள் வர்த்தகம் செய்ய முற்படுகிறார்கள், அவர்கள் தவறாக வழிநடத்த முற்படுகிறார்கள், பெரும்பாலும் கிரிமினல் குழுக்களால் ஆட்கடத்தல் நடக்கிறது. அதனால்தான் அந்த வழியில் நடந்துகொள்வது மிகவும் தவறாகனது’ என தெரிவித்தார்.
அவர் தனது அரசாங்கம் “எல்லைகளில் வலுவாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.
பல அரசாங்கங்கள் நீண்ட காலமாகச் செய்ததைப் போலவே, சரியானதைச் செய்வதற்கான சர்வதேச கடப்பாடுகளைக் கவனித்து, தனது நிர்வாகமும் செய்யும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நம்பிக்கையில் நாட்டில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் அல்பனீஸை நிழல் குடிவரவு அமைச்சர் டான் டெஹான் வலியுறுத்தியுள்ளார்.
கடலில் கவிழ்ந்த படகுகள் மற்றும் அகதிகளின் உடல்கள் போன்ற பயங்கரமான காட்சிகளை ஆஸ்திரேலியர்கள் திரும்பப் பார்க்க விரும்பவில்லை என்று முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் கூறினார்.