முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. பொதுமக்கள் மீது கொட்டான்களால் தாக்கியதால் 2 பேரின் கை உடைக்கப்பட்டுள்ளது. 3 இளைஞர்களை அடித்து, காவலரணிற்குள் அடைத்து வைத்துள்ளனர். நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
நேற்று (18) இரவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இராணுவம் – பொதுமக்களிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு, மோதலாக வெடித்தது.
இதை தொடர்ந்து கொட்டான்களுடன் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதியில் பொதுமக்களின் வாகன கண்ணாடிகள், போத்தல்கள் உடைந்து சிதறியிருப்பதாகவும், போர்க்களம் போல காட்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இராணுவத் தாக்குதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சென்ற போது, பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். எனினும், அப்போதும் இராணுவ காவலரணிற்கும் 3 பொதுமக்கள் இராணுவத்தினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
என்ன நடந்தது?
முல்லைத்தீவு, விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வருமென எதிர்பார்த்து நேற்று இரண்டாவது நாளாகவும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இரவு, பகலாக உணவு, தூக்கமின்றி மக்கள் வரிசையில் காத்திருந்த போதும், எரிபொருள் வந்தபாடாக இல்லை.
தொழில், உணவு இல்லாமல் மக்கள் விரக்தியடைந்திருந்த நிலையில், விசுவமடு கல்லாறு பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை தனது ஆதங்கத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெளிப்படுத்தியதாக, கல்லாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அவர் மது போதையில் இருந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் என இராணுவத்தரப்பினரால் குறிப்பிடப்பட்டு, இராணுவ காவலரணிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற கல்லாறு மக்களும், தகவலறிந்த கிராம மக்களும் அங்கு ஒன்றுகூடி, அடைத்து வைக்கப்பட்டிருந்த நபரை விடுவிக்க வலியுறுத்தினர்.
எனினும், இராணுவத்தினர் அதை கணக்கிலெடுக்கவில்லை.
‘இராணுவத்தினர் எப்படி ஒருவரை பிடித்து அடைத்து வைக்கலாம்?, இங்கு இராணுவ ஆட்சியா நடக்கிறது?, இது மியான்மரா?’ என பொதுமக்கள் கேள்வியெழுப்பினர்.
அடைத்து வைக்கப்பட்டிருந்தவரை விடுவிக்க வேண்டுமென எரிபொருள் வரிசையில் நின்ற ஏனையவர்களும் வலியுறுத்த, அங்கு கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இதன்போது இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பொதுமக்கள் கற்கள், தடிகளால் இராணுவ காவலரண் மீதும், அங்கு வந்த இராணுவ வாகனம் மீதும் தாக்கினர்.
இராணுவத்தினர் கொட்டன்களுடன் அங்கு நிலைகொண்டுள்ளதாகவும், நகரிலுள்ள கடைகள் பூட்டப்பட்டு வர்த்தகர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு வீதி போக்குவரத்து இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிசார் வந்தனர். எனினும், அவர்கள் பக்கச்சார்பாக நடப்பதாக சி.சிறிதரன் குற்றம்சுமத்தினார்.
இராணுவத்தினர் கொட்டனால் அடித்து இருவரின் கைகளை உடைத்துள்ளதாகவும் குற்றம்சுமத்தினார். அவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.