மன்னார், நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று (10) காலை நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் உயிலங்குளத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் இருவரும் சகோதரர்கள். காயமடைந்தவர்களும் நெருங்கிய உறவினர்களே.
உயிலங்குளத்ததை சேர்ந்த சகோதரர்களான யேசுதாசன் றோமியோ (40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (33) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நீடித்து வந்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குழுவாக சென்று, நொச்சிக் குளத்தை சேர்ந்தவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த தரப்பினர் நீண்டகாலமாக சண்டித்தனத்திலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், தம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தியும் வந்துள்ளதாக நொச்சிக்குளத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களின் முன்னரும் நொச்சிக்குளத்தை சேர்ந்த சிலர் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவ தினமான நேற்று(10) வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர்களின் மூத்த சகோதரர் ஒருவரும், மேலும் ஒருவரும் நொச்சிக்குளத்தில் உள்ள மாட்டு வண்டி சவாரியில் வெற்றி பெற்ற ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தர்க்கம் கைகலப்பாக மாறியது. வம்புக்கு வந்த இருவர் மீதும் நொச்சிக்குளத்தை சேர்ந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
எனினும், அவர்கள் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமது சகோதரனும், மற்றொருவரும் தாக்கப்பட்டதை அறிந்து, உயிலங்குளத்திலிருந்து றோமியோவும், தேவதாசும் நொச்சிக்குளம் சென்றுள்ளனர்.
நொச்சிக்குளம் கிராமத்திலுள்ள வீடு ஒன்றிற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையிலே சகோதரர்கள் இருவர் மீதும் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட குழுவினரின் அட்டூழியத்தை பொறுக்க முடியாமலே, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
-குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.