உக்ரைன்-ரஷ்யா யுத்தம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கலாம். பல இலங்கையர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவையே பெற வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (3) தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்த பிரதமர், உக்ரைன்-ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை என்றும், இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதன் தாக்கம் இலங்கையில் 2024 வரை நீடிக்கும் என்றார்.
இந்த உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக, இலங்கை இந்த ஆண்டு பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தவறிவிட்டது, இதன் விளைவாக, இலங்கையர்கள் விரைவில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறினார்.
கொழும்பு மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.