மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிமேல் எரிவாயுவிற்கு ரோக்கன் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, பயனியர் வீதியில் இன்று எரிவாயு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.
இதை தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் கோவிந்தன் கருணாகரம் கருத்து தெரிவிக்கையில்,
”இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினேன்.
பயனியர் வீதியில் ஏற்கனவே 250 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அந்த 250 பேருக்கும் நாளை எரிவாயு வழங்குவதாக மாவட்ட அரச அதிபர் உறுதியளித்தார்.
அத்துடன், இனிமேல் மாவட்டத்தில் டோக்கன் நடைமுறையை தொடர்வதில்லையென அரச அதிபர் குறிப்பிட்டார். எரிவாயு ஒவ்வொரு பிரதேச முகவர்களிற்கும் வழங்கப்படும். முகவர்கள் ஊடாகவே விநியோகம் இடம்பெறும்’ என்றார்.




