ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, கொழும்பு 7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட கொழும்பு நகரின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பயணங்களின் போது மற்றும் நிரந்தர வதிவிடங்கள் மீது பொதுமக்கள் எதிர்ப்பு அல்லது தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்க வேண்டுமென புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சில அமைப்புகள் முன்னாள் பிரதமர் மீது அதிருப்தியில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் பல நாட்கள் பதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.