பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேரப்போவதாக அறிவித்த நிலையில், நேட்டோவில் அவர்கள் இணைவதற்கு சம்மதம் தெரிவிக்கப் போவதில்லை என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.
“பாதுகாப்பு அமைப்பான நேட்டோவில் சேர துருக்கிக்கு எதிராக செயற்படும் நாடுகளுக்கு நாங்கள் ‘ஆம்’ என்று சொல்ல மாட்டோம்,” என்று துருக்கியின் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஸ்வீடன் ஒரு “புகலிடம்” என்று எர்டோகன் குற்றம் சாட்டினார்.
குர்திஷ் பிரிவினைவாதிகளைக் குறிப்பிட்ட துருக்கியின் ஜனாதிபதி, சுவீடன் மற்றும் பின்லாந்து பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
நோர்டிக் நாடுகள் “பயங்கரவாத அமைப்புகளுக்கான விருந்தினர் இல்லம் போல” இருப்பதாக எரோட்கன் கூறியிருந்தார்.
துருக்கி அரசாங்கம் “பயங்கரவாதிகள்” என்று அழைக்கப்படுபவர்களை ஒப்படைக்க மேற்படி இரண்டு நோர்டிக் நாடுகளிடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்தது.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) மீது சுவீடன் மற்றும் பின்லாந்து மெத்தனமாக நடந்து கொள்வதாக துருக்கி அரசாங்கம் நீண்டகாலமாக குற்றம் சுமத்தி வருகிறது. துருக்கிய பிரிவினை அமைப்பான பிகேகே, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலும் உள்ளது.
ஜனாதிபதி எர்டோகனை அணுகும் முயற்சியில் தனது நாடு தூதர்களை துருக்கிக்கு அனுப்புவதாக சுவீடன் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்திருந்தார்.
உக்ரைன் போருக்கு மத்தியில் பல தசாப்தங்களாக நடுநிலை வகித்து வந்த சுவீடனும், பின்லாந்தும், நேட்டோ அமைப்பில் இணைய முடிவெடுத்தன. நேட்டோவில் சேருவதற்கு பின்லாந்து விருப்பம் தெரிவித்ததை அடுத்து, நேட்டோவின் அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்கத் தயாராக இருப்பதாக திங்களன்று சுவீடன் அறிவித்ததை அடுத்து, எர்டோகனின் இந்த எதிர்வினை வந்துள்ளது.