ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு முக்கிய மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அமரபுர பிரிவில் பிரதம சங்கநாயகராக கடமையாற்றும்ஓமல்பே சோபித தேரர் மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோர்,இன்று (12) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்தமை முறையான நடைமுறைக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவினால் வெற்றிடமாக இருந்த பிரதமர் பதவியை நிரப்ப ரணில் விக்கிரமசிங்க பொருத்தமானவர் அல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தமை, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை புறக்கணிக்கும் செயலாகும் என்றார்.
பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்கிரமசிங்கவையும், அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லையென கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான ஒருவரை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பேராயர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதமரைத் தெரிவு செய்வதை தாம் நிராகரிப்பதாகவும், இந்த உத்தேச நடவடிக்கை ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் நாட்டை மேலும் பாதிக்கும் என்று பேராயர் தெரிவித்தார்.