நயன்தாராவை முதன்முதலில் சந்தித்து கதை சொன்ன அனுபவத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து பாடல்கள் எழுதுவதில் கவனம் செலுத்தினார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் கதையை எழுதிய விக்னேஷ் சிவன் அக்கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். கிட்டத்தட்ட பத்து ஹீரோக்களுக்கு மேல் அக்கதையை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். இருப்பினும் யாருக்கும் அக்கதையில் நடிக்க உடன்பாடில்லை.
அவ்வாறு சில ஹீரோக்கள் நடிக்க ஒப்புக்கொண்டாலும் தயாரிப்பாளர்கள் தயாராகவில்லை. ஒரு வழியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கதையை கூறும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதிக்கு போடா போடி படம் மிகவும் பிடித்த படம் என்பதால் அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் நானும் ரவுடி தான் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து போக நடிக்க ஒப்புக்கொண்டார். நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என எண்ணினார் விக்னேஷ் சிவன். நயன்தாராவும் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.
எனவே விக்னேஷ் சிவன் ஒரு நாள் நயன்தாராவை சந்தித்து கதை சொல்ல சென்றார். கதை சொல்ல செல்லும் வழியில் விக்னேஷ் சிவன் மனதில் ஒரே எண்ணம் தான் இருந்ததாம். நயன்தாராவிற்கு கதை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
நயன்தாராவை போல ஒரு முன்னணி நடிகையிடம் இரண்டு மணி நேரம் அருகில் அமர்ந்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே போதும் என்ற மனநிலையில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் கதை சொல்ல சென்றாராம். ஆனால் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் கூறிய கதை மட்டும் பிடிக்காமல் அவரையும் பிடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.