ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க ஊடகச் செய்தியில், “புடின் புற்றுநோய் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் அதனை தள்ளிப்போட்டுவந்த நிலையில் தற்போது உடல்நிலை கருதி அந்த சிகிச்சையை உடனே மேற்கொள்ளவிருக்கிறார். அதனால் தனது அதிகாரங்களில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய அதிகாரியான நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருக்கிறார். புற்றுநோய் பாதிப்பு மட்டுமல்லாமல் புடினுக்கு வேறு சில பாதிப்புகளும் உள்ளன. அவருக்கு பார்க்கின்சன்ஸ் ( மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோய் இருக்கிறது. அதனாலேயே அவர் நலிவுற்று காட்சியளிக்கிறார். பொது இடங்களில் படபடப்புடன் நடந்து கொள்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புடின் சுமார் 2 மணி நேரம் பாத்ருசேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையிலேயே அமெரிக்க ஊடகங்கள் சில இச்செய்தியை வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஏதும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை என்றும் அமெரிக்க உயரதிகாரி ஒருவர் கூறினார்.