இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பிரான்பற்று, முல்லையடி பகுதியில் 17 வயதான மாணவி தீயில் எரியுண்டு உயிரிழந்தார்.
தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியான சுதர்சன் சுதர்சிகா (17) என்ற மாணவியே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் வழங்கிய வாக்குமூலத்தில்,
மாணவி வீட்டின் சுவாமி அறையை பூட்டி விட்டு படித்துக் கொண்டிருந்தார். சுவாமி அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கு சரிந்து, உடுப்புக்களின் மீது விழுந்துள்ளது.
உடுப்புக்கள் பற்றியெரிந்து அருகிலிருந்த மின்சார வயரிலும் பற்றியது. சுவாமி அறைக்குள் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் போத்தலிலும் பற்றியுள்ளது.
மாணவி அறைக்குள்ளிருந்து வெளியே வர முயன்றுள்ளார். எனினும், அறைக்குள்ளிருந்த அலமாரி, கதவுக்கு குறுக்கே விழுந்துள்ளது.
இந்த சமயத்தில் அருகிலிருந்த ஆலயத்தில் ஒலிபெருக்கி சத்தமாக பாடிக்கொண்டிருந்துள்ளது.
சம்பவத்தின் போது, மாணவியின் தாய், தம்பி, தங்கை, தாத்தா, அம்மம்மா ஆகியோர் வீட்டின் முன்பக்கம் இருந்தனர். தந்தை வெளியில் சென்றிருந்தார். எனினும், ஒலிபெருக்கி சத்தம் காரணமாக மாணவியின் அலறல் சத்தம் கேட்கவில்லை.
சுவாமி அறையில் இருந்து புகை வருவதை அவதானித்த பின்னரே, சத்தமிட்டு அயலவர்களை அழைத்து, அறையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.
இதன்போது மாணவி கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இளவாலை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.