28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று தொழிலாளர் தினம்!

உலகமெங்கும் இன்று தொழிலாளர் தினம் அல்லது மே தினம் நினைவுகூரப்படுகிறது.

மே தினம் என்பது தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கங்களின் அடையாளமாகும்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார்.

பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஓகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் தீர்மானித்தது.

1886 ஆம் ஆண்டு மே 4 ஆம் திகதி சிகாகோவில் நடந்த ஹேமார்க்கெட் விவகாரத்தில் உச்சக்கட்டத்தை எட்டிய எட்டு மணி நேர நாளுக்கான முந்தைய பிரச்சாரத்தைத் தொடர அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு திகதியைத் தேர்ந்தெடுத்தது.

மே தினம் பின்னர் ஒரு வருடாந்த நிகழ்வாக மாறியது.

இலங்கையில் 1927ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதன்முதலாக மே தினத்தை அனுசரிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!