‘சம்பவ இடத்தில் இருந்த மூத்த அதிகாரி ‘கண்ணீர்ப்புகை’ என்றார். முச்சக்கரவண்டியில் மறைந்திருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதே சமயம் மூத்த அதிகாரி, “இது வேலை செய்யாது, சுட்டுக் கொல்லுங்கள்” என்றார். அப்போது போலீசார் எங்களை சுட்டனர். தப்பியோடிய நபர்களை போலீஸார் விரட்டிச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்’.
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.
ரம்புக்கனை போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹிரிவடுன்ன, ரம்புக்கனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷான் (41) என்பவரின் மரணம் தொடர்பில் ரம்புக்கனை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் நேற்று (21) சாட்சியமளித்த நேரில் கண்ட சாட்சியொருவர் (இரண்டாம்) இவ்வாறு தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்னவும், பொதுமக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சரத் ஜயமான்ன, ரெயின்ஸ் அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, மைத்திரி குணரத்ன, சட்டத்தரணி தேஜித கோரலகே, சட்டத்தரணி சமிந்த அத்துகோர ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் ஆரம்பமான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
பின்னர் நீதிவான், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம், சட்டமா அதிபர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என வினவினார். காவல்துறை சார்பில் ஆஜரானதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்தார்.
இரண்டாவது சாட்சி விசாரணையில் சாட்சியம் அளித்தார்.
“நான் மதியம் 2 மணிக்கு எரிபொருள் நிரப்பச் சென்றேன். அப்போது எண்ணெய் வரவில்லை. அங்கு போராட்டம் நடந்தது. நானும் அதில் கலந்து கொண்டேன். இரண்டு பவுசர்கள் இருந்த இடத்தில்தான் போராட்டக்காரர்கள் இருந்தனர். முதலில் கேகாலை வீதியின் ஒரு ஓரத்தில் பொலிஸார் இருந்தனர். அதற்கு முன்னால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் பின்னால் மறைந்திருந்தனர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடுவில் நான் இருந்தேன்.
முச்சக்கர வண்டியின் பின்னால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மறைந்திருந்தனர் . ஒரு மூத்த அதிகாரி தேசிய இலட்சினை மற்றும் இரண்டு நட்சத்திரங்களை அணிந்திருந்தார். சிறிது நேரத்தில் மூன்று பொதுமக்கள் வந்தனர். அவர்கள் யாரென்று தெரியவில்லை. போலீசார் மீது மூவரும் கற்களை வீசி தாக்கினர். அப்போது மூத்த அதிகாரி, ‘கண்ணீர்ப்புகை தாக்குதல்” என கடட்டளையிட்டார்.
அப்போது மூன்று காவல்துறையினர் முச்சக்கர வண்டிக்கு பின்னால் மறைந்திருந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது மூத்த அதிகாரி, ‘இது வேலை செய்யாது, சுட்டுக் கொல்லுங்கள்’ என்றார். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மடவளை வீதியில் ஓடினேன். என்னுடன் இன்னும் நிறைய பேர் ஓடினார்கள். போலீசார் எங்களை விரட்டிச் சென்று சுட்டனர். நாங்கள் ஓடும்போது போலீசார் எங்களை நோக்கி சுட்டனர். நான் ஓடி ஒரு கோவிலில் நுழைந்தேன் என்றார்.
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் மனைவி சமன் குமாரி இவ்வாறு சாட்சியமளித்தார்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. எரிபொருள் நிரப்பப் போவதாக அவர் கூறினார். அப்போது ஒருவர் எனக்கு போன் செய்து, உங்கள் கணவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். நான் கேகாலை மருத்துவமனைக்குச் சென்றேன். கணவரை மருத்துவமனை தள்ளுவண்டியில் பார்த்தேன். பிறகு வீட்டுக்கு வந்தேன். நாங்கள் வீட்டில் இருந்தபோது ஆயுதம் ஏந்திய ஆட்களை ஏற்றிக்கொண்டு ராணுவ டிரக் ஒன்று எங்கள் வீட்டுக்கு வந்தது. அங்கு சுமார் 20 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு நட்சத்திர சின்னம் பொறித்த அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் என்னிடம், “நாங்கள் உங்களுக்கு உதவ வந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் ” என ஒரு கூடாரத்தைக் கொண்டு வந்து அடித்தார்கள்.
அவர்கள் எங்களுக்கு உணவும் பானமும் கொண்டு வந்தனர். சிறிது நேரம் கழித்து நான் அவர்களிடம் சொன்னேன், எனது கணவர் ராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் படையிலோ பணிபுரிந்ததில்லை அதனால் உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை என. பின்னர் அவர்கள் சென்றுவிட்டனர்.
இன்று (நேற்று) காலையும் அந்தக் குழு எங்கள் வீட்டுக்கு வந்தது. நான் அவர்களிடம், “ஐயா, நீங்கள் தங்க வேண்டியதில்லை” என்று சொன்னேன். அந்த. அந்த கூடாரம் இன்னும் இருக்கிறது.
என் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இது கடைசி மரணமாக இருக்கப்போவதில்லை. அவர்கள் சீருடை மற்றும் நட்சத்திரம் பதித்த கொலைகாரர்கள்.மேலும் பலரை சுட்டுக் கொன்று விடுகிறார்கள். எனவே எனது கணவருக்கு நீதி வழங்குங்கள். ” (சாட்சி கண்ணீருடன் சாட்சியம் அளித்தார்)
சாட்சியமளித்த முதல் சாட்சி தொழிலதிபர். “நான் நான்கு மணிக்கெல்லாம் போராட்ட இடத்திற்கு வந்தேன்.அப்போது நிறைய பேர் இருந்தார்கள். இரண்டு பவுசர்களும் இருந்தன. அங்கிருந்த இளைஞர்களிடம், ‘இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.” என்றேன். அங்கிருந்த அனைவரும் எந்த நாசவேலையும் இன்றி பவுசரைப் பாதுகாத்தனர். நான் தண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து போராட்டக்காரர்களுக்கும், பக்கத்திலிருந்த போலீஸ்காரர்களுக்கும் கொடுத்தேன்.
சிறிது நேரம் கழித்து, ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் வந்து, ‘இந்த எண்ணெயை இறக்கி விடுங்கள், அப்போது பிரச்சனை முடிந்தது’ என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன் ‘இந்தப் பிரச்னைக்கு அது தீர்வாகாது’என.
பாடசாலையிலிருந்து வநந்தவர்கள் வீடு செல்ல வழி விட்டோம். ஆம்புலன்ஸ்கள் அவசர உதவியாளர்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டன. போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு மதிய உணவுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது. ‘போலீசார் சுடுகிறார்கள் என்று மக்கள் கூச்சலிட்டனர். அங்கே ஒரு வாயிலில் ஒளிந்து கொண்டேன். பின்னர் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பொலிசார் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவில்லை, நான் ரம்புக்கனை நோக்கி ஓடினேன்.
அப்போது ரயில் தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் காலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடனிருந்தார். நான் ஒரு கடைக்குள் சென்றேன். என்னால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக நான் கடைக்குள் இருந்தேன்; என்றார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி தொடர்பில் மக்கள் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். சம்பவ இடத்திற்கு நீதிவான் நேரில் சென்ற போது, அவர்கள் பல தகவல்களை வெளியிட்டனர்.
‘ஒரு பொலிஸ் அதிகாரியும், விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் வந்தனர். பின்னர் 3 பொலிசார் வந்தனர். அவர்களே முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தனர். அதனை நான் பார்த்தேன்’ என ஒருவர் சாட்சியமளித்தார்.
பொலிசார் முச்சக்கர வண்டிக்கு சாட்சியமளித்ததை தாமும் பார்த்ததாக மேலும் சிலரும் சாட்சியமளித்தனர்.
எரிபொருள் பவுசரை பாதுகாக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அப்படியாயின் எரிபொருள் பவுசருக்கு அருகிலல்லவா யாரையும் செல்லாமல் தடுத்திருக்க வேண்டும். பவுசருக்கு தீ வைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவத்தில் நின்ற பச்சை ரீசேட் அணிந்த ‘வேற்று’ மனிதர் மீது ஏன் சூடு நடத்தப்படவில்லை. அவர் யார்” என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.
பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, தடயவியல் அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசுப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (22) மீண்டும் அழைக்கப்படவுள்ளது.