உக்ரைன்- ரஷ்யா போரில் மேற்கு ஊடகங்கள் பரப்பும் ஒரு பக்க சார்பு தகவல்களின் மத்தியில் உக்ரைன் நிகழ்த்தும் கொடூரங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. உக்ரைன் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை, சாகசங்களாக மேற்கு சார்பு ஊடகங்கள் விதந்தோதி வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுடன் பேச்சு நடத்திய உக்ரைன் தூதுத்குழு உறுப்பினர் ஒருவரை, உக்ரைன் புலனாய்வு சேவை விசாரணையின்றி சுட்டுக் கொன்றிருந்தது. இது மேற்கு நாடுகள் மூச்சும் விட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைனிலுள்ள ரஷ்ய சார்பு கட்சி தலைவர் விக்டர் மெட்வெட்சுக்கிற்கு உக்ரைன் இராணுவ சீருடை அணிவித்து, கைவிலங்கிட்ட புகைப்படத்தை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியே வெளியிட்டுள்ளார்.
உக்ரைனினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து தப்பியோடினார். நேற்று (12) விசேட நடவடிக்கையொன்றின் மூலம் அவரை கைது செய்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா கூறிய காரணங்களில் ஒன்று- அங்குள்ள ரஷ்யர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு, ரஷ்ய அடையாளங்கள் அழிக்கப்பட்டு, இனவழிப்பிற்கு உள்ளாகிறார்கள் என.
உக்ரைன் தேசியவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்த ஜெலன்ஸ்கி, அங்குள்ள ரஷ்ய ஆதரவு கட்சிகளின் தலைவர்களை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சிறையிலடைத்தார்.
உக்ரைனில் உள்ள பணக்காரர்களில் ஒருவரான மெட்வெட்சுக், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தவர். உக்ரைனின் எதிர்கட்சியான வாழ்க்கைக்கான கட்சித் தலைவர். 67 வயதான அந்த வர்த்தகர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தனது தனிப்பட்ட நண்பராக கருதினார்.
ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் இருந்து இயற்கை வளங்களைத் திருட முயன்றதாகவும், உக்ரேனிய ராணுவ ரகசியங்களை ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகவும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கடந்த ஆண்டு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரத்தையும் உக்ரைன் முன்வைக்கவில்லை.
மெட்வெட்சுக் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்தார்.
பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து, வீட்டுக்காவலில் இருந்து தப்பியோடி விட்டார்.
ஜனநாயகம் பேசும் மேற்கு நாடுகளும், ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கையென்பதால், உக்ரைனின் மனித உரிமை மீறலை கண்டுகொள்ளவில்லை.
உக்ரைனின் மனித உரிமை மீறல் நடவடிக்கை ரஷ்யாவின் கோபத்தைத் தூண்டியிருந்தது. உக்ரைனிலுள்ள ரஷ்ய ஆதரவு தலைவர்கள் மீதான அரசியல் துன்புறுத்தல்களிற்கு அந்த நாடு “பதிலளிக்க” வேண்டியிருக்குமென புடின் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், மெட்வெட்சுக் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்விடம் இது தொடர்பில் வினவிய போது, “உக்ரைனில் இருந்து நிறைய போலிகள் வருகின்றன. இது முதலில் சரிபார்க்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
மெட்வெட்சுக் உக்ரைன் இராணுவச்சீருடை அணிந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக உக்ரைன் அரச புலனாய்வுச்சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மெட்வெட்சுக்கை ரஷ்யாவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், பதிலாக ரஷ்யாவினால் பிடிக்கப்பட்டுள்ள உக்ரைன் இராணுவ வீரர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.