மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ எரிவாயு மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் பகுதியில் உள்ள லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையில் வைத்து மக்களுக்கு வினியோகிக்கப் படுவதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த பல மாதங்களாக மன்னார் மாவட்டத்திற்கு என கொண்டு வரப்படும் லிற்றோ எரிவாயு மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள லிற்றோ கேஸ் எரிவாயு களஞ்சியசாலையில் வைத்து மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மேலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை முதல் மக்கள் குறித்த களஞ்சிய சாலைக்கு முன் நீண்ட நேரம் எரிவாயுவை பெற்றுக் கொள்ள நின்ற போதும் தனியாருக்கு விற்பனை செய்ய வாகனங்களில் ஏற்றிய போது மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மக்களுக்கு பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமன்னார் முதல் மன்னார் நகர பகுதியில் உள்ள மக்கள் எரிவாயுவை பெற்றுக் கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த களஞ்சியசாலையில் விநியோகிக்கப்படும் 12.5 KG லிற்றோ எரிவாயுவை 2770 ரூபாவிற்கு கொள்வனவு செய்து மன்னார் பகுதியில் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ் விடயத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் துரித நடவடிக்கை எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு என கொண்டு வரப்பட்டு ,உயிலங்குளம் பகுதியில் உள்ள லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையில் வைத்து விநியோகிக்கப்படும் எரிவாயுவை மன்னார் தீவு பகுதிக்கு கொண்டு வந்து உரிய வர்த்தக நிலையங்கள் ஊடாக நிர்ணய விலையில் வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.