29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
சினிமா

முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறது: ‘பீஸ்ட்’ படத்தைத் தடை செய்ய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் திகதி வெளியாக இருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்துவருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

2015 பெரு வெள்ளத்தின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் படத்தை குவைத் நாட்டில் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!