ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி எதிர்வரும் வியாழன் கிழமை பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா, அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்படும் வர்த்தகர்கள் உட்பட சகல நபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நண்பகல் வரை அந்தந்த நகரங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றவும் அவர் வலியுறுத்தினார்.
‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தின் அர்த்தத்தை இன்னமும் ஜனாதிபதி புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்த எந்தவொரு நிர்வாகத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரிப்பதற்கான தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நான்கு அமைச்சர்கள் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி., நாட்டுக்கு கேடு விளைவித்த அதே நபர்களுடன் கைகோர்க்கும் எண்ணம் தாங்கள் இல்லை என்றார்.
மக்களின் போராட்டத்திற்கு முழு மனதுடன் ஆதரவு அளிக்கப்படும் என்றார்.




