கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்து, காதல் உறவின் முறிவினால் எழுந்த வன்மத்தினால் உருவானது என்பது தெரிய வந்துள்ளது.
தீமூட்டப்பட்ட குடும்பத்தின் மகளுக்கும், இளைஞர் ஒருவருக்குமிடையிலான 12 வருட காதல் முறிந்ததை தொடர்ந்து, இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
காதலன் வீட்டுக்குள் நுழைந்து, யாரும் வெளியேற முடியாதபடி கதவை தாளிட்டு, பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
நேற்று (24) காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், தந்தை, மகள் மற்றும் காதலன் உயிரிழந்துள்ளனர். 60 வயதுடைய தாயார் பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை முத்துதம்பி ஈஸ்வரதேவன் (70) கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வருகிறார்.
ஈஸ்வரதேவன் சந்திரவதனி (மேனகா) என்ற 29 வயதான மகள் மற்றும் அவரது காதலன் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
யுவதியின் காதலன் நேற்று (24) காலை வீட்டிற்கு வந்து, வீட்டில் பெற்றோலை தெளித்து தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியும், காதலனும் கடந்த 12 வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளனர். யுவதி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
காதலன் கண்டியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிபவர் என்பதுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, அவருடனான காதல் உறவை யுவதி துண்டித்துள்ளார்.

நேற்று காலை காதலன் ஒரு கலன் பெட்ரோலுடன் வீட்டிற்கு வந்துள்ளார். காதலியை தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
சந்திரவதனியின் தந்தை மற்றும் தாயாரும் தகராறில் ஈடுபட்டதால், காதலன் வீட்டின் முன்பக்க கதவை அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
அப்போது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ மளமளவென பரவியது.
வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட்டுள்ளனர். எனினும், அந்த வீட்டில் அடிக்கடி தகராறு நடப்பதால் அயலவர்கள் பெரிதாக எடுக்கவில்லை. எனினும், எம்மை காப்பாற்றுங்கள் என தொடர்ந்து வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் அங்கு சென்று பார்த்து, விபரீதத்தை உணர்ந்தனர்.
அயலவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்நுழைந்து 60 வயதான தாய் ராணியம்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏனையவர்களை காப்பாற்ற முடியவில்லை.