மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இருவரும் பேஸ்புக்கில் கடலை போட்டு, காதல் வசப்பட்டுள்ளனர்.
இளைஞனாக அறிமுகப்படுத்திய நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டுள்ளார்.
அத்துடன், 60 வயது பெண்ணிடம் காதல் முன்மொழிவையும் வைத்துள்ளார். மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார்.
இதுவரை 3.5 இலட்சம் ரூபா பணத்தை மூதாட்டி வைப்பிலிட்டுள்ளார். இப்பொழுது காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எப்படியாவது தனது காதலனை கண்டுபிடித்து தாருங்கள், அவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றே மூதாட்டி முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.