யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று (14) திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் மாவட்ட செயலகம் அரசியல் பிடிக்குள் சென்றுவிட்டது, யாழ் அரச அதிபர் அரசியல் கட்சி உறுப்பினரை போல செயற்படுகிறார் என பல தரப்பிலும் விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், இன்று போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரச சுற்று நிருபங்களை முறையாக நடைமுறைப்படுத்து, மாவட்ட செயலகம் அரசியல் கட்சி அலுவலகமா?, மாவட்ட செயலாளரே அதிகாரியாக துணிந்து செயல்படுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இப்போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்த நிர்வாக செயலாளர்களான இராமநாதன் ஐங்கரன், ஸ்ரீரங்கேஸ்வரன், சிவகுரு பாலகிருஷணன், வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.