25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 17ஆம் நாள்: ரஷ்யாவிடம் சரணடையுங்கள்: சமரசத்தில் இறங்கிய இஸ்ரேல், ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை!

♦நாட்டு மக்களை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் சரணடையுமாறு உக்ரைனிற்கு இஸ்ரேல் அறிவுரை கூறியுள்ளது.

♦பெலாரஸ் நாட்டு இராணுவத்தையும் போரில் ஈடுபடுத்தும் முயற்சியில் ரஷ்யா- உக்ரைன் குற்றச்சாட்டு

♦சிரிய போராளிகளை உக்ரைனிற்குள் களமிறக்கும் ரஷ்யா

♦தலைநகர் கீவை மெதுமெதுவாக சுற்றிவளைக்கும் ரஷ்யா


உக்ரைனை சரணடையும்படி இஸ்ரேல் அறிவுரை

ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சரணடையுங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் அறிவுரை கூறியுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சமரச முயற்சியை ஆரம்பித்துள்ள இஸ்ரேல், உக்ரைனின் சரணடைவே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமென கருதுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், இஸ்ரேல் பிரதமர் நேரில் சந்தித்து பேசியிருந்தார். பின்னர் ஜேர்மன், பிரான்ஸ் தலைவர்களுடன் பேசினார்.

இதன்பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை, ஜெலன்ஸ்கயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பென்னட், சரணடையும் அறிவுரையை கூறியுள்ளார்.

எனினும், பென்னட்டின் ஆலோசனையை ஜெலென்ஸ்கி ஏற்கவில்லை.

“நான் நஉங்கள் இடத்தில் இருந்தால், என் மக்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்து, வாய்ப்பைப் பெறுவேன்” என்று பென்னட் கூறினார்.

ஜெலென்ஸ்கியின் பதில் குறுகியதாக இருந்தது: “நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதியும் அவரது சகாக்களும் இந்த ஆலோசனையை விரும்பவில்லை.

மேலும் இராணுவ மற்றும் பாதுகாப்பு உதவிகளை கோர வேண்டாம் என உக்ரைனை இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் அத்தகைய கோரிக்கை மத்தியஸ்த முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்துள்ளது.


செர்னிஹிவ் நகரம் மீது கடும் தாக்குதல்

உக்ரைனின் வடக்கு நகரமான செர்னிஹிவ் இன்னும் கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதலை எதிர்கொள்கிறது என்று பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் சாஸ் கூறினார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், ரஷ்ய துருப்புக்கள் சிவிலியன் உள்கட்டமைப்பைக் குறிவைத்ததாகக் கூறினார்.

“எந்தவொரு இராணுவமும் இல்லாத இடங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. அமைதியான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.


சமீபத்திய வெளியேற்ற முயற்சிகளின் போது ரஷ்ய தாக்குதல்கள் தொடர்கின்றன என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்

இரண்டு உக்ரேனிய பிராந்தியங்களின் ஆளுநர்களான கெய்வ் மற்றும் டொனெட்ஸ்க் வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில், உக்ரைன் மக்களை வெளியேற்றவும், “மனிதாபிமான நடைபாதைகள்” மூலம் உதவிகளை கொண்டு வரவும் முயற்சிக்கும் பகுதிகளில் ரஷ்ய தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறினர்.


அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஆயுத கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தயாராக இருந்தால் அமெரிக்காவுடன் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

ரியாப்கோவ் RIA செய்தி நிறுவனத்திடம், மாஸ்கோவும் வாஷிங்டனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் உக்ரைன் தொடர்பான உரையாடலைத் தொடர வாஷிங்டன் தயாராக உள்ளது என்பதற்கான அறிகுறிகளை கிரெம்ளின் காணவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் ரஷ்யா அனுப்பிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த முன்மொழிவுகள் செல்லுபடியாகாது, ஏனெனில் நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது என்று கூறினார்.


ரஷ்யாவின் நிபந்தனைகளிற்கு இணங்குமாறு உக்ரைனுக்கு இஸ்ரேல் அழுத்தம் கொடுக்கவில்லை என்று உக்ரைன் ஆலோசகர் கூறுகிறார்

பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்குமாறு இஸ்ரேல் அழுத்தம் கொடுப்பதாக வெளியான செய்திகளை, உக்ரேனிய ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் ட்விட்டரில் தெரிவித்தார்.

“இராணுவ மற்றும் அரசியல் காரணங்களுக்காக இது சாத்தியமற்றது. மாறாக, நிகழ்வுகளை இன்னும் போதுமானதாக மதிப்பிடுமாறு ரஷ்யாவை இஸ்ரேல் வலியுறுத்துகிறது” என்றார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் தூதரக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அடையாளம் தெரியாத உக்ரைனிய அதிகாரியை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் வாலா நியூஸ் மற்றும் ஜெருசலேம் போஸ்டில் வந்த ஒரு அறிக்கை, ரஷ்யாவிற்கு அடிபணியுமாறு பென்னட் உக்ரைனை வற்புறுத்தியதாகக் கூறியது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் நேற்றைய 16 வது நாள் நிலவரப்படி, ரஷ்யப் படைகள் குறைந்தது நான்கு முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து, தலைநகர் கீவ்வை நோக்கி நெருங்கின. தலைநகர் உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, ஆனால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் மிக அதிகரித்துள்ளது.

நேற்று வரையான கள நிலவரத்தின் சுருக்கம் வருமாறு –

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும், கார்கிவ் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அஆனால் நகரம் இப்போது சூழப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் நகருக்கு வெளியே இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யப் படைகள் ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் பிரிவினைவாத டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் வழியாகவும் தாக்குதலை தொடர்ந்து, வடக்கிலிருந்து நுழைந்த ரஷ்யப் படைகளுடன் இணைந்துகொள்ள முயன்றன.

வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரம் இப்போது ரஷ்ய துருப்புக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மனிதாபிமான வழித்தடத்தின் வழியாக வெளியேற முடிந்தது. –

தலைநகர் கீவ் மற்றும் அதன் வடக்கு பகுதிகளில் கடுமையான குண்டுவீச்சுகள் நடந்த போதிலும், அவை உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் ரஷ்ய படைகள் தொடர்ந்து மெதுவாக நகரத்தை நோக்கி முன்னேறி வருவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இர்பின் மற்றும் புச்சா உள்ளிட்ட வடமேற்கு புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே பல நாட்கள் பலத்த குண்டுவீச்சு தாக்குதல் நடந்து வருகிறது. ஆனால் ரஷ்ய கவச வாகனங்களும் வடகிழக்கு எல்லையிலும் முன்னேறி வருகின்றன.

அமெரிக்க சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் ஃபோர் த ஸ்டடி ஒஃப் வோர் வெளியிட்ட தகவலில், கீவ் சுற்றிவளைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று கூறியது.

உக்ரைனியப் படைகள் வடக்கு நகரமான செர்னிஹிவின் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொண்டன.ஆனால் நகரம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தெற்கு உக்ரைனிலுள்ள மூலோபாய நகரமான மரியுபோலை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளது, மேலும் நகரத்திலிருந்து 200,000 பொதுமக்களை வெளியேற்றும் முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன. மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை புதன்கிழமை தாக்கப்பட்டது.

முக்கிய துறைமுக நகரமான ஒடெசா உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.  இதுவரை சண்டை அங்கு நடக்கவில்லை.

ஆனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட எச்சரிக்கையில், ரஷ்ய தரைப்படைகள் நகரைத் தாக்கும் என எச்சரித்துள்ளது.

ரஷ்யப் படைகள் கடந்த வாரம் கிரிமியாவின் வடக்கே உள்ள தெற்கு நகரமான கெர்சனைக் கைப்பற்றின, மேலும் வடமேற்கில் உள்ள மைக்கோலாய்வ் நகரத்தின் கட்டுப்பாட்டிற்கு இப்போது கடுமையான சண்டை உள்ளது. ரஷ்யப் படைகள் இப்போது மைக்கோலாய்வின் வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறினார்.


உக்ரைன் மீது பெலாரஸ் படைகளும் தாக்குதல் நடத்துமென உக்ரைன் உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.

பெலாரஸ் படைகள் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக, ரஷ்யா சில சோடித்த தாக்குதல்களை நடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதன்படி, உக்ரேனிய-பெலாரஸ் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கொபானியின் பெலாரஷ்ய குடியேற்றத்தின் மீது ரஷ்ய விமானம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

“வெள்ளிக்கிழமை 14.30 மணியளவில், ரஷ்ய விமானங்கள் பெலாரஸில் உள்ள ஒரு விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு, உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து, எங்கள் குடியிருப்புகளான ஹொரோடிஷ் மற்றும் டுமென் பகுதிகளின் மீது பறந்து, மீண்டும் பெலாரஸிற்குள் நுழைந்து கோபானி (பெலாரஸ்) குடியேற்றம் மீது குண்டு வீசின. உக்ரைனிலிருந்து வந்த விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக காண்பிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று உக்ரைனிய விமானப்படை முகநூலில் தெரிவித்துள்ளது.

“இது ஒரு ஆத்திரமூட்டல். பெலாரஸ் குடியரசின் ஆயுதப்படைகளை உக்ரைனுடனான போருக்கு இழுப்பதை நோக்கமாக கொண்டது” என்றும் உக்ரைனின் விமானப்படை கூறியது.

அதே நேரத்தில், உக்ரைனின் மாநில எல்லைக் காவலர் சேவை, பெலாரஸ் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, உக்ரைன் பிரதேசமும் ரஷ்ய விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறியது.

இதேவேளை, உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) வெளியிட்ட அறிவிப்பொன்றில்,

“நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்: உக்ரேனிய இராணுவம் பெலாரஸ் குடியரசிற்கு எதிராக எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் திட்டமிடவில்லை! நாங்கள் பெலாரஷ்ய மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் – உங்களை ஒரு குற்றவியல் போரில் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்! நீங்கள் ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்ததில்லை. கிரெம்ளினின் நலன்களுக்காக இப்போது கொலைகாரர்களாக மாறாதீர்கள்” என்று கேட்டுள்ளது.


நகர மேயர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்

Zaporizhia பிராந்தியத்தின் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் ஃபியோடோரோவ்  (Ivan Fedorov) ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் Kyrylo Tymoshenko தெரிவித்துள்ளார்.

“முதற்கட்ட தகவல்களின்படி, மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் ஃபியோடோரோவ் ஒரு மணி நேரத்திற்கு முன்பு படையெடுப்பாளர்களால் கடத்தப்பட்டார்” என்று திமோஷென்கோ தனது டெலிகிராம் சனலில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோவும் டெலிகிராம் சனலில் இதனை குறிப்பிட்டார்.

“மெலிடோபோலில், 10 பேர் கொண்ட படையெடுப்பாளர்கள் குழு, எதிரியுடன் ஒத்துழைக்க மறுத்த நகர மேயரான இவான் ஃபெடோரோவைக் கடத்தியது. கடத்தலின் போது, அவர்கள் அவரது தலையில் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்தனர். எதிரி அவரை நகர போக்குவரத்து மையத்தில் தடுத்து வைத்தனர்.. இவான் ஃபெடோரோவின் அலுவலகத்தில் உக்ரேனியக் கொடி இருந்தது, ”என்று அவர் கூறினார்.


அணுசக்தி பாதுகாப்புக் கொள்கைகளை ரஷ்யா மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

ரஷ்யா அணுசக்தி பாதுகாப்புக் கொள்கைகளை மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது, உக்ரைனில் “அணுசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது” கவலை அளிப்பதாகக் கூறியது.

“கார்கிவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் பற்றிய அறிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். நெருங்கிய கால பாதுகாப்பு ஆபத்து குறைவாக உள்ளது, ஆனால் அணுசக்தி நிலையங்கள் மீது ரஷ்ய துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நிறுத்தப்பட வேண்டும்” என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோல்ம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


லுட்ஸ்க், இவானோ-பிரான்கிவ்ஸ்க் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேற்கு உக்ரைன் நகரங்களான லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் மீது ரஷ்ய வான் மற்றும் ஏவுகணைப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் கூறியுள்ளது.

ரஷ்ய தரைப்படைகளின் முன்னேற்றத்திற்கு துணையாக விமானங்கள் இந்த தாக்குதல்களை நடத்தி வருவதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை ருவிற்றிரில் தெரிவித்துள்ளது.


ரஷ்ய இராணுவப் பிரிவுகள் கீவிற்கு அருகில் நகர்கின்றன

ரஷ்ய இராணுவப் பிரிவுகள் உக்ரைன் தலைநகர் கீவிற்கு அருகே தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு குடியிருப்பு பகுதிகளை நோக்கி பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று ஒரு அமெரிக்க தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maxar Technologies நிறுவனத்தின் தகவலின் படி, கீவின் வடமேற்கில் உள்ள Moschun நகரத்தில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன.


உக்ரைன் போரில் வெளிநாட்டு போராளிகளை களமிறக்கும் ரஷ்யா!

உக்ரைனில் போரின தன்னார்வலர்களை ஈடுபடுத்தலாமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டு தலைவர்களுடனான உயர்மட்ட தலைவர்களுடனான சந்தப்பில் இந்த பகிரங்க யோசனையை புடின் முன்வைத்தார்.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராடிய போராளிக்குழுக்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா தயாரிக் வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் இந்த புதிய நிலைமை உருவாகியுள்ளது.

உக்ரைனில் தன்னாட்சி பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட 2 பிரதேசங்களிலும் இவர்கள்களமிறக்கப்படலாமென தெரிகிறது.

உக்ரைன் போரில் ஈடுபட சிரியாவிலிருந்து 16,000 தன்னார்வலர்கள் இணைந்துள்ளதாக இந்த சந்திப்பில் ரஷ்யா தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

Leave a Comment