யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் கனடா வைத்தியசாலையொன்றுக்கும் வழங்கப்படுவதாக அவரின் நண்பரும் கனடா இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவருமான குலா செல்லத்துரை தெரிவித்தார்.
இன்று(10) வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழப்பதற்கு முன்னர் சீலா சுகுமார் தெரிவித்த விருப்பத்திற்கமைய இந்த உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்வதற்கு கனடா மற்றும் இலங்கையில் ஒரு கூட்டு முயற்சி காணப்பட வேண்டும் என்றார்.
இதுகுறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,இந்த உதவி வைத்தியசாலை நலன்புரி சேவைக்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக இருதய சிகிச்சை பிரிவிற்கு தேவையான இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.