நாட்டில் கணிசமான மழை பெய்யும் வரை மின்வெட்டு காலத்தை குறைப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடி வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய, மாத்தறை மற்றும் சபுகஸ்கந்த ஆகிய இடங்களில் இயங்காத மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெயை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட அதேவேளை, மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டரீதியான தடைகள் உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றார்.
மின்வெட்டு காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை பொருளாதாரம் தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளதாக அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை, மின்வெட்டு மற்றும் மின்வெட்டு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள் போன்றவற்றால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதற்கு அரசாங்கம் வருந்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அழகப்பெரும, இது ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி அல்லது அமைச்சரின் பிரச்சினையல்ல என்றும், வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியின் விளைவு என்றும் கூறினார்.
எரிபொருளைப் பெறுவதற்கு மட்டும் நாட்டிற்கு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அரசாங்கம் அடிப்படை உரிமைகளை மதிக்கின்றது எனவும், இதில் சந்தேகம் எதுவும் தேவையில்லை எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். .
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகள் தொடர்பில் 31 நாடுகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அடைந்துள்ள சாதகமான முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளன.
15 வருடங்களுக்கு முன்னர் சுமார் 14,000 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்கியுள்ள அதேவேளை, அத்தகைய முறைப்பாடுகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே மனித உரிமைகள் பேரவையில் உள்ளவர்கள் இத்தகைய முயற்சிகளை பாராட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.