கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் பிரபல டாட்டூ கலைஞர் பி.எஸ்.சுஜீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாட்டூ வரையச் சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக 6 பெண்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் தலைமறைவாகியிருந்தார். எனினும், நேற்று முன்தினம் பொலிசாரிடம் சரணடைந்தார்.
கொச்சியில் செயல்பட்டு வரும் ‘இங்க்ஃபெக்டட்’ என்ற பிரபல டாட்டூ கடையில், டாட்டூ வரைய சென்ற 6 பெண்கள் அவர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர்.
தன்னிடம் வரும் பெண்களிற்கு டாட்டூ வரையும் போது, தயக்கமில்லாமல் இருக்க வேண்டுமென கூறி, சில்மிஷம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் டாட்டூ வரைய சென்ற 18 வயதான மொடல் அழகி, இதுகுறித்த விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இதனையடுத்து, இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பெண்கள் தங்களுக்கும் சுஜீஷால் பாலியல் தொல்லையளிக்கப்பட்டதாக முறையிட்டனர்.
நேற்று, அவரது இங்க்ஃபெக்டட் என்ற டாட்டூ நிலையத்திற்கு பொலிசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு 2 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தனர்.
தன் மீதான பாலியல் புகார்களின் பின்னணியில் தனது போட்டியாளர்கள் இருப்பதாக கைதான பி.எஸ்.சுஜீஷ் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் மீண்டும் கூறினார்.
ஒரு வருடத்திற்குள் தனது வளர்ச்சி பலரை பொறாமை கொள்ள வைத்துள்ளது என்றும் கூறினார்.
புகார்கள் தன்னை அழிக்கும் முயற்சி என்று சுஜீஷ் கூறினார். ஆனால், சுஜீஷுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் பல விஷயங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.