தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சட்டப்படியும், நேர்மையாகவும் விசாரணை நடத்ததவறிய காவல் துறை அதிகாரிகள்மீது தமிழக டிஜிபி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், 10 பக்கங்கள் அடங்கிய விசாரணை குறித்த தகவல்களையும், மாநில அரசுக்கான பரிந்துரைகளையும் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக டிஜிபிக்கு ஜன.20-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், ஜன.30 வரை எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து ஆணையத்துக்கு 3,545 புகார்கள் வந்ததால், நாங்களே ஜன.30, 31-ம் தேதிகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினோம்.
இறந்து போன பள்ளி மாணவி, மதமாற்றம் செய்ய விடுதி வார்டனால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதிக்காததால், கழிப்பறையை சுத்தம் செய்தல், வளாகத்தை சுத்தம் செய்தல், துணிகளை துவைப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க பள்ளி நிர்வாகம் தவறியுள்ளது.
புலன் விசாரணை அதிகாரிகள், இந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை சரிவர செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள வார்டனிடம் தனியாக விசாரிக்கவோ, அவரை சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவோ இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும், மாணவி உட்கொண்ட விஷம் எங்கு வாங்கப்பட்டது என்று கூட விசாரிக்கப்படவில்லை. புலன் விசாரணை அதிகாரியின் இத்தகைய நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை நடைபெறுகிறதா என்ற ஐயத்தை உருவாக்குகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே அவர் விஷம் குடித்த விவரம் தெரியவந்துள்ளது. மாணவியின் மரணத்துக்கான காரணத்தை மறைக்கும் தீய நோக்கத்துடன் பள்ளி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மாணவிக்கு, மாற்றாந்தாய் கொடுமைகள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பள்ளி நிர்வாகம் சம்பவத்தையே திசை திருப்ப முயன்றுள்ளது.
மாணவியின் மரணம் தொடர்பாக, குறிப்பாக மதம் மாற கட்டாயப்படுத்தியது தொடர்பாக விசாரிக்குமாறு மாணவியின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை காவல் துறை ஏற்கவில்லை. சட்டப்படி செய்யவேண்டிய புலன்விசாரணை, இந்த மாணவி மரணத்தில் செய்யப்படவில்லை என்பது எங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளியின் விடுதியானது முறைப்படியான சட்ட அங்கீகாரம் பெறவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் பணியாளர்கள் கூறியதன் அடிப்படையில், தமிழக அரசு உருவாக்கியுள்ள குழந்தைகள் நல குழுவும், ஆய்வுக்குழுவும் தனது கடமையை செய்யத் தவறியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில், அனுமதியின்றி விடுதி இயங்கியதை கண்காணிக்கத் தவறிய மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனையும், உரிய இழப்பீடு மற்றும் உதவிகளையும் வழங்க வேண்டும். மாநிலம்முழுவதும் இவ்வாறு இயங்க கூடியநிறுவனங்களை பட்டியலிட வேண்டும். சம்பந்தப்பட்ட விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை அனுமதிபெற்று இயங்கும் வேறு விடுதிக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த வழக்கின் விசாரணையை சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்த தவறிய மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.