மாத்தறை பரேவி துவா விகாரைக்கு செல்லும் பாலம் இன்று (04) மாலை இடிந்து விழுந்தது. கடலில் விழுந்தவர்கள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அந்த பாலத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது மரப்பாலம் உடைந்து விழுந்துள்ளது.
மஹியங்கனையிலிருந்து உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று பாலத்தின் நடுவில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
சிறு குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கடலில் விழுந்து பாலத்தின் இரும்பு வேலியில் தொங்கி உதவிக்குரல் எழுப்பினர்.
அந்த பிரதேசத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று, கடலில் விழுந்தவர்களை காப்பாற்றினர்.
இந்த விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
எனினும், அவர்களது கையடக்கத் தொலைபேசிகள், காலணிகள், கைப்பைகள் என்பன கடலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.
பாலம் இடிந்து விழுந்ததில் வெளிநாட்டினர் உட்பட சுற்றுலாப் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் தீவில் சிக்கித் தவித்தனர், மேலும் காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையில் ஈடுபட்டன.
அதன்படி, தீவில் சிக்கிய சுமார் 60 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.