பேக்கரி பொருட்களுக்கு தேவையான கோதுமை மா, பட்டர், மாஜரின், பாம் ஓயில் போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.கே.ஜெயவர்தன, தற்போது பொதுமக்களும், பேக்கரி உள்ளிட்ட அனைத்து தொழில்துறையினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.
இந்த நிலையில் குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்கு பேக்கரி தொழில் இயங்க முடியாது என்று அவர் கூறினார்.
சில மாதங்களாக மாவுத் தட்டுப்பாட்டால் தொழில்துறை சுமையாக இருந்ததாகவும், தற்போது மற்ற மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேக்கரி தொழிலிற்கு தேவையான பட்டர், மாஜரின், பாம் ஓயில் மற்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், நாட்டின் தேவையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாத நிலையில், மின்வெட்டு காரணமாக பேக்கரிகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அனைத்து தொழில்களும் கடும் சுமைக்கு ஆளாகியுள்ளன என்றார்.