இரண்டாம் உலகப் போரின்போதுஇருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன என உக்ரைன் ஜனாதிபதி வொலடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே, ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தொடர்பில் இருந்து வருகிறார். தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக அவர் இரண்டாவது நாளில் வெளியிட்ட வீடியோ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் தானும், தனது குடும்பத்தினரும் தான் ரஷ்யாவின் இலக்கு என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அடுத்தடுத்த வீடியோக்களில் தொடர்ந்து உக்ரைனில் தான் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இப்போது தாக்குதல் 4வது நாளை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் வாயிலாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ள ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ஆனால் ரஷ்யா சொல்வது போல் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் தனக்கு ஆதரவாக சுதந்திரமான ஒரு படையை உருவாக்குவதாகக் கூறினார். உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவாளர்களைக் கொண்டு அந்த சுதந்திரப் படை உருவாகும் எண்று கூறியுள்ளார்.
தற்போது அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், “உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. நேற்றிரவு ரஷ்யப் படைகளின் தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. இன்று மீண்டும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். பள்ளிக்கூடங்கள், ஆம்புலன்ஸ்கள் மீது கூட தாக்குதல் நடத்துகின்றனர். வாஸில்கிவ், கீவ், செரிஞ்சிவ், சுமி, கார்கிவ் ஆகிய நகரங்களில் மக்கள் மோசமான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது எங்கள் நாடு எதிர்கொண்டிருந்த நிலை தான் இப்போதும் நிலவுகிறது” என்று ஜெலன்ஸ்கி பதிவு செய்துள்ளார்.